/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலியல் குற்றங்கள்; அதிகரிக்கும் விழிப்புணர்வு
/
பாலியல் குற்றங்கள்; அதிகரிக்கும் விழிப்புணர்வு
ADDED : பிப் 23, 2025 02:35 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விழிப்புணர்வு காரணமாக பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், வாகனங்கள், ஓட்டல்கள் என, பல இடங்களில் அவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் இருந்து பாதுகாக்க, 'போக்சோ' சட்டம் வந்த பிறகும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. போலீஸ் தரப்பில் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற விழிப்புணர்வு மூலம் கடந்த காலத்தை விட தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலும், குற்றங்கள் குறைந்தபாடு இல்லை. பதின்ம வயதில் உள்ளவர்கள் மீது குடும்பத்தில் உள்ளோர் அக்கறை காட்டாமல் இருக்கும் போது, இன்றைய சமூக வலைதளங்கள், திரைப்படம் போன்ற பலவற்றின் தாக்கத்தால் வழிமாறி செல்கின்றனர். குழந்தைகள் தங்கள் வளரும் சூழல், சுற்றத்தார் என, ஏதாவது ஒரு விஷயத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
புகார்கள் அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாநகர, மாவட்ட போலீசார் பலவிதமான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் ஆரம்பித்து, பள்ளி, கல்லுாரி என அன்றாடம் 'போக்சோ' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். விழிப்புணர்வு மூலம் தாராபுரம், பல்லடம் என, சில இடங்களில் வீட்டில், அக்கம்பக்கத்தினர் மூலம் பள்ளி சிறுமிகளிடம் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளியே தெரிந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சமீபத்தில் கோவையில் இருந்து திருப்பூருக்கு வேலை தேடி, குழந்தையுடன் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியிடம், பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அறைக்கு பீஹார் வாலிபர்கள் அழைத்து சென்றனர். நள்ளிரவில், கணவர், குழந்தையை கத்திமுனையில் வைத்து மிரட்டிய வாலிபர்கள், மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் புகாரின் பேரில், 17 வயது சிறுவன் உட்பட, மூன்று பேரை கைது செய்தனர்.
இதே போன்று, அவிநாசி, காங்கயம், தாராபும், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல், திருமணம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று அத்துமீறலில் ஏற்பட்ட கர்ப்பம் என, பலவிதப் புகார்களில் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
பாலியல் புகார்களில் போலீசார் சட்டப்படி நடவடிக்கை ஒரு பக்கம் எடுத்து வந்தாலும், வீட்டில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிப்பதோடு, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்வழிப்படுத்த அவர்களுடன் இருக்க நேரங்களை ஒதுக்க வேண்டும். அவர்களின் பிரச்னைகள், தேவைகளை காது கொடுத்து கேட்பது போன்றவற்றை பெற்றோர் செய்ய வேண்டும்.