/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டை கழிவுநீர்மயம்; தென்னைகள் மடிகின்றன
/
குட்டை கழிவுநீர்மயம்; தென்னைகள் மடிகின்றன
ADDED : ஆக 22, 2024 12:32 AM

திருப்பூர் : விஜயாபுரம் குட்டை நிரம்பி வழிந்து, கழிவுநீர் தோட்டத்துக்குள் புகுந்ததால், தென்னை மரங்கள், நோய் தாக்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவில் இருந்து தெற்கே செல்லும் ரோட்டில், மேற்குப்புறமாக, மூன்று ஏக்கர் பரப்பில் குட்டை உள்ளது.
முத்தணம்பாளையம், கோவில்வழி பகுதி குட்டைகள் நிரம்பி, மழைநீர் வெளியேறும் போது, விஜயாபுரம் வழியாக வந்து, மழைநீர் இக்குட்டையில் சேகரமாகும்.
குட்டையில் இருந்து வெளியேறும் உபரிநீர் வாய்க்கால் வழியாக சென்று, நொய்யல் ஆற்றில் கலந்துவந்தது. நாளடைவில், வாய்க்கால் மாயமானது; குட்டையில் தேங்கும் கழிவுநீர், மழைக்காலங்களில் அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்து நாசப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
விஜயாபுரம் சுற்றுப்பகுதியில் புதிய குடியிருப்புகள் உருவானதால், தினமும் கழிவுநீர் வெளியேறுவது அதிகரித்து விட்டது. கடந்த, ஐந்து ஆண்டுகள் முன் வரை, கழிவுநீர் தனியே குட்டையில் தேங்கி நிற்கும்; மழைநீர் அதில் கலக்காமல், மற்ற பகுதிகளில் தேங்குவது போல் வடிவமைக்கப்பட்டது. அனைத்து சாக்கடை கால்வாய்களும், இக்குட்டையில் வந்து சேரும்.
இருப்பினும், குட்டை நிரம்பினால், தண்ணீர் வெளியேறும் வாய்க் காலை கண்டறிய, மாநகராட்சி அதிகாரிகளும் முயற்சிக்கவில்லை.
சிறிய மழை பெய்தாலும், அருகே உள்ள விளைநிலங்களுக்குள் கழிவுநீர் புகுந்து, கிணறுகளிலும் கலந்து விடுகிறது.
பல மாதங்களாக கழிவு நீர் தேங்குவதால், 20 ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.