ADDED : ஜூன் 13, 2024 07:36 AM

திருப்பூர்: திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 'சிக்னல்' வைக்கப்பட்ட இடங்களிலேயே வாகன நெரிசலால் சிக்கல் ஏற்படுகிறது.
திருப்பூரில் உஷா தியேட்டர், வீரபாண்டி பிரிவு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன், அவிநாசி - திருப்பூர் ரோட்டில், எஸ்.ஏ.பி., தியேட்டர், குமார் நகர் ஆகிய இடங்களில் 'சிக்னல்' பொருத்தப்பட்டுள்ளன. சிக்னலையொட்டி சில அடி துாரத்தில் பஸ் நிறுத்தம் இருப்பதால், நடுரோட்டில் அரசு மற்றும் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால், பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் சிக்னல் பொருத்தப்பட்ட சாலையிலேயே வரிசை கட்டி நிற்கின்றன.
நல்லுார் நால் ரோட்டில், சர்ச் அருகே சிக்னல் பொருத்த வேண்டும். காங்கயம் சாலையில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ் நடத்துனர்கள், பயணிகளை உஷா தியேட்டர் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது நடுரோட்டில் இறக்கி விடுகின்றனர்; இதனால், விபத்து நேரிடும் வாய்ப்புள்ளது.
திருப்பூர் - அவிநாசி சாலை, பெரியார் காலனி சந்திப்பு சாலையில், 'சிக்னல்' இல்லாததால் திருப்பூரில் இருந்து அவிநாசி இடையே வாகனங்கள் வேகமாக பயணிக்கும் நிலையிலேயே பெரியார் காலனி சந்திப்பு சாலைக்குள் இருந்து ஏராளமான வாகனங்கள் மெயின் ரோட்டுக்கு வருகின்றன. இதனால், இங்கு நொடிப் பொழுது வாகன ஓட்டிகள் கவனச்சிதறலுடன் வாகனங்களை ஓட்டினால் கூட, விபத்து என்பது, தவிர்க்க முடியாததாகிவிடும்.