ADDED : ஜூலை 09, 2026 07:20 PM
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி... அரசு உத்தரவை செயல்படுத்ததால் விவசாயிகள் ஆவேசம்
உடுமலை: உடுமலையில், அரசு ஆணைப்படி, ஆலாம்பாளையம் பூசாரிநாயக்கன் ஏரிக்கு நீர் திறக்க வலியுறுத்தி, நீர் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ஆலாம்பாளையம் குளம் எனப்படும் பூசாரிநாயக்கன் ஏரி. ஏராளமான கிராமங்களுக்கு, நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது; 88 ஏக்கர் நேரடி பாசனமும் பெறுகிறது.
முன்பு, மழை நீர் ஓடைகள் மற்றும் திருமூர்த்திமலை பாலாறு வழியாக நீர் வரத்து கிடைத்து வந்தது. பி.ஏ.பி., திட்டத்தில், திருமூர்த்தி அணை கட்டிய பிறகு, குளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது.
குளம் வறண்டு, கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அப்பகுதி விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பழமையான வரலாற்று ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், கடந்த, 2012 முதல், பி.ஏ.பி., பாலாறு படுகை துணை அமைப்பாக இக்குளம் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு, 39.86 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவும், உயர் நீதிமன்ற உத்தரவும் நடைமுறையில் உள்ளது.
நடப்பாண்டு குளம் வறண்டு காணப்படுகிறது. வறட்சியை சமாளிக்க, குளத்திற்கு நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., பாலாறு திட்டத்தின், துணை பாசன பகுதியாக கருதி, திருமூர்த்தி அணையிலிருந்து, மானுப்பட்டி கால்வாய் வழியாக, ஆலாம்பாளையத்திலுள்ள பூசாரிநாயக்கன் ஏரிக்கு நேற்று (9ம் தேதி) முதல் வரும், 11ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, 20 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால், பி.ஏ.பி., திட்ட குழு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, அதிகாரிகள் நேற்று காலை திருமூர்த்தி அணையிலிருந்து, ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க மறுத்தனர்.
அதிருப்தியடைந்த விவசாயிகள், உடுமலையிலுள்ள பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வளத்துறை அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்திய நிலையில் முடிவு எட்டப்படவில்லை.
விவசாயிகள் கூறியதாவது : பாரம்பரியமாக பாலாற்று நீரால், குளம் நிரம்பிய நிலையில், பி.ஏ.பி., பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டதால், குளத்திற்கு நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது.
பாலாற்று நீர் உரிமையை கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெறப்பட்டதோடு, அரசும், பாலாற்றின் துணை அமைப்பாக கருதி, ஆண்டுக்கு 39.86 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு ஆணை உள்ளது.
அதன்படி, ஆண்டுக்கு இரு முறை, ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. தற்போது, மூன்று நாட்களுக்கு, 20 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டும், பகிர்மான குழு, பாசன விவசாயிகள் என காரணம் கூறி, அதிகாரிகள் தண்ணீர் திறக்க மறுக்கின்றனர். குளத்திற்கு நீர் திறக்கும் வரை, போராட்டம் தொடரும்.
திருமூர்த்தி அணையிலிருந்து, உப்பாறு அணை , வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அடிக்கடி நீர் திறக்கப்படுகிறது.
பாலாற்றின் வாயிலாக நீர்வரத்து பெற்று வந்த குளத்திற்கு, வெறும் 20 கனஅடி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாசன சங்க நிர்வாகிகள், மற்ற பகுதிகளுக்கு நீர் திறக்கும் போது மவுனம் காக்கின்றனர்.
பி.ஏ.பி., பாசனத்தில் நீர் திருட்டு, முறைகேடாக கூடுதல் நீர் எடுத்து, பல பகுதிகளுக்கு பாசன நீர் கூடுதல் நாட்கள் வினியோகம் உள்ளிட்ட எந்த பிரச்னைகள் குறித்தும் கண்டு கொள்ளாமல், 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக உள்ள குளத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரசு உத்தரவு, நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், அதிகாரிகளை நீர் திறக்க விடாமல் தடுத்து வருகின்றனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
