/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காய சாகுபடி குறையும்?
/
சின்ன வெங்காய சாகுபடி குறையும்?
ADDED : மார் 25, 2024 12:53 AM
பொங்கலுார்;ஏற்றுமதி தடையாலும், விளைச்சல் அதிகரிப் பாலும் தொடர் நஷ்டம் ஏற்படுவதால், வரும் காலங்களில் சின்ன வெங்காய உற்பத்தி குறைந்து, விலை ஏற்றத்துக்கு வழி வகுக்கும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் வெங்காய அறுவடை முடிந்து விடும். இதனால், விலை உயர்வை தவிர்க்க முடியாது. இதை கருத்தில் கொண்டே கடந்த ஆண்டு இறுதியில், மத்திய அரசு வெங்காய ஏற்று மதிக்கு தடை விதித்தது.
ஏற்றுமதி தடை விலக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மீண்டும் தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்தை தவிர்க்க சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்து வருகின்றனர்.
ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி தடை நீங்கும்; விலை உயரும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், தேர்தல் நேரத்தில் வெங்காய விலை உயர்ந்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீட்டித்துள்ளது என்று விவசாயிகள் கருதுகின்றனர்.
இந்த தடையால் சின்ன வெங்காயமும் பாதிக்கப்பட்டுள்ளது. சின்ன வெங்காயம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இதற்கு உற்பத்தி செலவு அதிகம். பெரிய வெங்காயத்துடன் சேர்த்து சின்ன வெங்காயத்திற்கும் தடை விதிப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஒரு கிலோ அதிகபட்ச விலையே, 30 ரூபாய்தான். குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கு விலை போகிறது.
விவசாயிகள் கூறுகையில், ''ஏற்றுமதிக்கு தடை, விளைச்சல் அதிகரிப்பு போன்றவற்றால் தொடர் நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் வரும் வைகாசி பட்டத்தில் வெங்காய சாகுபடி பரப்பை குறைப்பதை தவிர வேறு வழி இல்லை. அப்போது வெங்காய விலை கடுமையாக உயரும். நுகர்வோரை மட்டும் பார்க்காமல் விவசாயிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றனர்.

