sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்

/

'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்

'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்

'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்


ADDED : ஜூன் 11, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூரில் நடைபெற்றுவரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் முறையாக நடைபெறாமலும், முடிந்த பணிகள் பராமரிப்பு இன்றியும் உள்ளன.

ஸ்மார்ட் ரோடுகள்


நகரப் பகுதியில் அகலமாக உள்ள பல ரோடுகள் தேர்வு செய்து, ஸ்மார்ட் ரோடுகளாக மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவ்வகையில், 15 கி.மீ., நீளமுள்ள ரோடுகள் ஸ்மார்ட் ரோடாக மாற்றப்பட்டுள்ளது.

ரோடுகளில் நடைபாதை, அலங்கார தெரு விளக்குகள்; மழைநீர் வடிகால்; குடிநீர், மின் மற்றும் தொலை தொடர்பு கேபிள்களுக்கு தனி'டக்ட்' அமைப்பு என அமைக்கப்பட்டது. ஆனால், ஒரு சில ரோடுகள் தவிர இந்த ஸ்மார்ட் ரோடுகள் உரிய வகையில் அமைக்கப்படவில்லை. நடைபாதை கற்கள் பெயர்ந்து பல இடங்களில் பெரும் இடையூறாக உள்ளன.

குழாய் உடைப்பால், கான்கிரீட் ரோடுகள் பல இடங்களில் வெட்டி எடுத்தும், தோண்டிப் போட்டும் கிடக்கிறது. மழை நாட்களில் வடிகாலுக்குச் செல்லாமல் ரோட்டில் மழைநீர் தேங்குவது சகஜகமாக உள்ளது.

மீன் மார்க்கெட்


தென்னம்பாளையம் சந்தை வளாகம் அருகே மீன் மார்க்கெட் கட்டி முடித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வளாகம், திறப்பு விழா கண்டது முதல் மூடியே உள்ளது.

மார்க்கெட்டுக்கு மீன் லோடு கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்துமிடமாக மட்டுமே தற்போது பயன்படுகிறது. வளாகத்துக்கு வெளியே சுகாதாரமற்ற முறையில் தான் மீன் கடைகள் செயல்படுகின்றன.

டவுன் ஹால்,பார்க்கிங் வளாகம்


குமரன் ரோட்டில் டவுன்ஹால் அரங்கம் இருந்த இடத்தில், பன்னோக்கு மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இது 53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் அதனருகே, 13 கோடி ரூபாய் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இந்த இரு வளாகங்களும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இதுவரை அழைப்பு விடுக்கப்பட்ட டெண்டரில் ஒருவர் கூட டெண்டர் எடுக்க வரவில்லை. இது போல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்து முடித்தும் பயனில்லாத நிலை காணப்படுகிறது.

நொய்யல் கரை மேம்பாடு


மாநகரின் மையப் பகுதியில், நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. மாநகராட்சி எல்லைக்குள் ஏறத்தாழ 10 கி.மீ., நீளத்துக்கு நொய்யல் அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பு, புதர்கள், கழிவு நீர் வாய்க்கால் கலப்பு, குப்பைகள் கழிவுகள் கொட்டி பாழ்படுத்துதல் போன்றவற்றிலிருந்து நொய்யலைக் காப்பாற்றும் வகையில், நொய்யல் கரை மேம்பாடு திட்டம், 160 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படுகிறது.

நொய்யல் கரையின் இருபுறங்களிலும் ஆற்றினுள், கான்கிரீட் சாய்வு தளம் அமைத்தல், கரை மீது ரோடு அமைத்தல், கழிவு நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு மையம் அமைத்தல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில், கரையோரம், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் அமைக்கப்படுகின்றன.

இத்திட்டம் சில இடங்களில் முழுமை பெறாமல், கழிவு நீர் வடிகால் கட்டுதல், சாய்வு தளம் அமைத்தல் ஆகியன கிடப்பில் போட்டுக் கிடக்கிறது. கரையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை.

நிதி வீணடிப்பு


முந்தைய ஆட்சிக் காலத்தில், அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும், அதன் பின்னர் தனிஅலுவலர் கட்டுப்பாட்டிலும் இது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உரிய திட்டமிடல் இல்லாமல் நிதி அதிகளவில் வீணடிக்கப்பட்டுள்ளது.

தேவையான திட்டங்கள், பயன்படும் விதமான கட்டுமானங்கள் என ஏற்படுத்தாமல் மெத்தனமாக இருந்துள்ளனர் என பொதுமக்களும், கவுன்சிலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

இருப்பினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான வளாகங்கள் கட்டி முடித்து, நிர்வாகத்துக்கு எந்த வருவாயும் இன்றி உள்ளது. எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, பணி முடிந்த கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளை முதல் ஆய்வுக்கூட்டம்: மேயர்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளில் ஏற்பட்ட தொய்வு குறித்து, மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய டவுன் ஹால் வளாகம், 9 அரங்குகளுடன் அமைந்துள்ளது. இதை வணிக ரீதியான பயன்பாட்டுக்கு சில நிறுவனங்கள் கேட்டன. ஆனால், இது மாநாட்டு அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பதில் நிர்வாகம் உறுதியாக உள்ளது.

இதனை மாணவர்கள், தொழில் அமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினர் பயன் பெறும் விதமாக மட்டுமே பயன்படுத்தப்படும். மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் பயிலரங்கம்; தொழிற்துறையினருக்கு கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையில் சில நடவடிக்கை குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

அதேபோல் புது பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம், பிராண்டட் நிறுவனங்களுக்கு பனியன் சந்தை போன்ற வகையில் பயன்படும் விதமான யோசனை உள்ளது. இது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து கட்டடங்களும் உரிய வகையில், வருவாய் இழப்பு இன்றி பயன்படும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஏறத்தாழ 3 மாதம் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவில்லை. நாளை முதல் பிரிவு வாரியாக பணிகள் நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இன்று (நேற்று) இது குறித்து உரிய பிரிவு பொறுப்பாளர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. நடந்து வரும் பணிகள் நிலை குறித்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us