/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெங்களூரில் இருந்து 'குட்கா' கடத்தல்; 5 பேர் கைது
/
பெங்களூரில் இருந்து 'குட்கா' கடத்தல்; 5 பேர் கைது
ADDED : ஆக 18, 2024 01:50 AM

திருப்பூர்:பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு சப்ளை செய்ய கடத்தி வரப்பட்ட, 426 கிலோ குட்கா மற்றும் மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரில் கஞ்சா, குட்கா உட்பட போதை பொருட்களின் புழக்கம் தொடர்பாக, போலீசார், உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் கொடிகம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்து வந்த நபரை கைது செய்து, 124 கிலோ பறிமுதல் செய்து, வீட்டுக்கு 'சீல்' வைத்தனர்.
இதனையடுத்து, பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு மொத்த விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்ய சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வருவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகைக்கு தகவல் கிடைத்தது.
இதனால், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, செங்கப்பள்ளி அருகே பைபாஸ் ரோட்டில் சந்தேகப்படும் விதமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குட்கா மூட்டைகள் இருப்பது தெரிந்தது. உடனே, தனிப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில், போலீசாரும் விரைந்தனர்.
விசாரணையில், சதீஷ்பாபு, 35, முருகன், 38, பரமசிவம், 30, இளையராஜா, 32 மற்றும் குரு, 29 என்பதும், அடிக்கடி பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு வாகனங்கள் வாயிலாக, குட்கா கடத்தி விற்பதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 426 கிலோ குட்கா, மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து, ஐந்து பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த திலீப்பை பிடிக்க தனிப்படையினர் விரைந்தனர்.
---
கைப்பற்றப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.