/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் மண் திருட்டு; பறிமுதல் வாகனம் விடுவிப்பு: மக்கள் அதிர்ச்சி
/
பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் மண் திருட்டு; பறிமுதல் வாகனம் விடுவிப்பு: மக்கள் அதிர்ச்சி
பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் மண் திருட்டு; பறிமுதல் வாகனம் விடுவிப்பு: மக்கள் அதிர்ச்சி
பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் மண் திருட்டு; பறிமுதல் வாகனம் விடுவிப்பு: மக்கள் அதிர்ச்சி
ADDED : மார் 06, 2025 06:33 AM

பல்லடம்; பல்லடம் அருகே, மண் திருட்டில் ஈடுபட்டதாக கூறி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடத்தை அடுத்த, பொங்கலுார் ஊராட்சி, தொட்டம்பட்டி ரோட்டில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில், மண் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பொக்லைன், டிராக்டர்கள் என, 3 வாகனங்களை சிறை பிடித்த அப்பகுதி பொதுமக்கள், வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., ஆகியோர், ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், வாகனங்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொங்கலுார் பிர்கா வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியிடம் கேட்டதற்கு, ''பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டோம். மண் அள்ளப்பட்ட பகுதி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
தொட்டம்பட்டி கிராமத்தில், ரிசர்வ் சைட்டில் சிலர் மண் திருட்டில் ஈடுபட்டதால், புதிதாக குட்டை உருவானது. இது குறித்து தகவல் அறிந்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல், தற்போது பி.ஏ.பி., வாய்க்கால் இடத்திலும் சிலர் மண் திருட்டில் ஈடுபட்டனர். வாகனங்களை சிறைபிடித்து தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வாகனங்களை விடுவித்தனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தொடர்ந்து இதுபோல் மண் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.