மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நுண் உரமாக்கும் மற்றும் உயிர் எரிபொருள் மையம் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். கணபதிபாளையம் பகுதி, தாராபுரம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவில் ஆகிய இடங்களில் குடியிருப்பு வணிக கட்டடம் கட்டும் அனமதி வழங்குவதற்கான இடங்களை கமிஷனர் ஆய்வு செய்தார். ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மண்ணரை குளக்கரையில், நடைபாதை அமைப்பதையும் அவர் பார்வையிட்டார்.
---
நீர் மோர் பந்தல் திறப்பு
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், ஒவ்வொரு மண்டலத்தில் பா.ஜ., வினர் சார்பில், நீர் மோர் பந்தல் திறக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நல்லுார் மண்டல் தலைவர் நந்தகுமார் தலைமையில், காங்கயம் ரோட்டில் சஷ்டி கார்ஸ் எதிரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் நடராஜ், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் கவுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் சாலை மறியல்
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு குளத்துபுஞ்சை வீதியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக, கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற நகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தி, குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படும் என உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.