ADDED : ஜூலை 05, 2024 12:35 AM

கழிவுநீர் தேக்கத்தால் அவதி
பெருமாநல்லுார் ஊராட்சி, கற்பகாம்பாள் நகர் முதல் வீதியில், கழிவு நீர் செல்ல சாக்கடை கால்வாய் இல்லை. வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை தேக்க ஊராட்சி சார்பில், உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அது நிரம்பி துர்நாற்றத்தால் அப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியினர் கூறுகையில், 'கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள் அதிகளவில் உள்ளதால், தரைமட்டமாக உள்ள குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி உள்ள கழிவு நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பாறைக்குழியில் மேயர் ஆய்வு
திருப்பூர் மாநகரில் மக்களிடமிருந்து குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என, பிரித்து மாநகராட்சி சார்பில் பெறப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை தேங்காமல் அகற்ற, மாநகராட்சி முழுவதும் சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. இவ்வாறு, சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி சார்பில், பாறைக்குழிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படுகின்றன. இச்சூழலில், மும்மூர்த்தி நகரில் உள்ள பாறைக்குழியை மேயர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இதில், மண்டல தலைவர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் நளினி, செல்வி, தீபா, இணைச் செயலாளர் சுதா, கண்மணி, பரிமளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணைச் செயலாளர் சுதா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து, சுமதி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட இணை செயலாளர் சாந்தாமணி, துணை தலைவர் விஜயலட்சுமி நிறைவுரை வழங்கினர். ஒன்றிய பொருளாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.
போட்டியில் மாணவர் அசத்தல்
'பிட் இந்தியா' சார்பில், 7வது தேசிய அளவிலான டேக்வாண்டோ க்யூரி சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்தது. திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றனர். 41 கிலோ எடை பிரிவு போட்டியில், பிளாட்டோஸ் பள்ளியை சேர்ந்த, சபரிகிருஷ்ணன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி, 37 கிலோ எடை பிரிவில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் லவகேஷ் இரண்டாமிடம் பிடித்து வெள்ளியும் வென்றனர். பதக்கங்களை வென்ற மாணவர்களையும், பயிற்சியாளர் சரவணகுமார், பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி ஆகியோர் பாராட்டினர்.
என்.எச்., மையத்தடுப்பு சேதம்
பல்லடம், மாதப்பூர் அருகே விரிவாக்கம் செய்யப்பட்ட ரோட்டில் புதிதாக மையத்தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மையத்தடுப்புகள் சிறிது துாரத்துக்கு உடைந்து சேதமடைந்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக, வாகனங்கள் அசுர வேகத்தில் வந்து செல்கின்றன. கவனக்குறைவாக செல்லும் சில வாகன ஓட்டிகள் இது போன்ற விபத்துக்கு காரணமாகின்றனர். எனவே, ரோடு பணி முழுமையாக நிறைவடையும் வரை, மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியம்.
மாடு வரத்து உயர்ந்தது
அமராவதிபாளையத்தில் நடந்த மாட்டுச்சந்தைக்கு கடந்த இரு வாரங்களை விட நடப்பு வாரம் வரத்து அதிகமாகியது. ஒரு மாதமாக வரத்து, 750 முதல் 850 ஆக இருந்த நிலையில், நடப்பு வாரம் 938 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கன்றுகுட்டி, 2,500 - 4,000 ரூபாய்; மாடு, 25 ஆயிரம் - 28 ஆயிரம், காளை, 30 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. மாடு விற்பனை அதிகரித்ததால், 1.90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 'ஜூன் துவக்கம் முதல் மழை பரவலாக இல்லை. மழை இல்லாததால், பசும்புல் வளர்ச்சி இல்லை. தீவனம் பற்றாக்குறையால் கன்றுகுட்டிகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்ததால், வரத்து உயர்ந்துள்ளது. வியாபாரமும் சூடுபிடித்தது,' என, சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
குடத்துக்குள் சிக்கிய நாய்
பல்லடம், பனப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் - மாரியம்மன் கோவில் வளாகத்தில் சென்ற நாய் ஒன்று தண்ணீர் குடிக்க குடத்துக்குள் தலையை நுழைத்தது. அதில், நாயின் தலை குடத்துக்குள் சிக்கியது. தலையை வெளியே எடுக்க முடியாமலும், வழி தெரியாமலும், நாய், அங்கும் இங்கும் அலைந்தபடி குரைத்தது. இதனை பார்த்த சிலர், கோவில் பூசாரிக்கு தகவல் அளித்தனர். உடனே, அவர் கோவிலுக்கு வந்து கோவில் கேட் திறக்கப்பட்டு, நாயின் தலையில் சிக்கிய குடம் அகற்றப்பட்டது. அதன்பின், நாய் ஓட்டமெடுத்தது.