ADDED : செப் 05, 2024 12:40 AM

நாய்களை பிடித்த பணியாளர்கள்
திருப்பூர், தென்னம்பாளையத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த தெருநாய்களை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர். தென்னம்பாளையம், சந்தைபேட்டை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவது மற்றும் வாகனங்களின் குறுக்கே வருவது என மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி நிருதரப்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான செய்தி 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் வெளியானது. மக்களுக்கு அச்சுறுத்தலாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று பிடித்து, கருத்தடை சிகிச்சைக்காக கூண்டு வேனில் கொண்டு சென்றனர்.
தாவரவியல் பூங்கா திறப்பு
பல்லடம் ஒன்றியம், சங்கோதிபாளையத்தில், வெங்கடாசலம் வனம் என்ற பெயரில், புதிய தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஊராட்சி பணிகள் குழு தலைவர் பாலசுப்ரமணியம், பி.டி.ஓ., ரமேஷ், தாவரவியல் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், எஸ்.வி.ஏ., குழுமங்களின் தலைவர் ராமகிருஷ்ணன், ஏ.ஜி.பி., நிறுவன தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் பி.டி.ஓ., கனகராஜ் பூங்காவை திறந்து வைத்தார். ஹார்வெஸ்ட் நிறுவனத் தலைவர் பழனிசாமி, கூப்பிடு விநாயகர் அறக்கட்டளை தலைவர் சின்னசாமி, தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
---
மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர்
மாற்றுத் திறனாளிகள் நான்கு பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்க வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3.50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அதில் பெறப்பட்ட ஸ்கூட்டர்களம், பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏ., விஜயகுமார், பங்கேற்று, பயனாளிகள் நான்கு பேருக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மகாராஜ், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் சுப்பு, ஈஸ்வரன், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
---
அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
அவிநாசி கிளை தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரமேஷ்குமார் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில், புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான முடிவை தமிழக முதல்வர் விரைவாக அறிவிக்க வேண்டும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எண்: 309ன்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
---
பஸ் ஊழியர்களுக்கு 'அட்வைஸ்'
பல்லடத்தில் இருந்து, வெளியூர் செல்வோர் அரசு மற்றும் தனியார் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இது குறித்து, பல்லடம் போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'பஸ் படிக்கட்டுகளில், மாணவர்கள் தொழிலாளர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதற்கு, பஸ் ஓட்டுநர், நடத்துனர்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. அதிவேகமாக பஸ் இயக்குவதுடன், படிக்கட்டு பயணத்தை அனுமதித்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நலத்துனரின் லைசன்ஸ் மற்றும் பஸ் உரிமம் ரத்து செய்யப்படும்,' என்றனர். முன்னதாக, அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர் நடத்துனர்களிடம், இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸை போக்குவரத்து போலீசார், டிரைவர், நடத்துநர்களுக்கு வினியோகித்தனர்.