/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு குழந்தைகளை சாதனையாளராக்கலாம்
/
சிறப்பு குழந்தைகளை சாதனையாளராக்கலாம்
ADDED : செப் 01, 2024 01:52 AM

''சிறப்பு குழந்தைகளை வளர்த்தெடுக்க முதலில் நிறைய பொறுமை வேணும்ங்க. அவங்களுக்கு வழக்கமான வாழ்க்கை முறையை கற்றுத்தர முடியும்; ஆனால், அந்த வாழ்க்கை முறைக்குள் அவர்களை கொண்டு செல்ல முடியாது.
குழந்தைகளை அவர்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்ப பயிற்றுவித்து, சிலரை, 10ம் வகுப்பு தேர்வு கூட எழுத வைக்கிறோம். நீச்சல், யோக கலையில் கூட இத்தகைய மாணவர்கள் சாதனையாளர்களாக வலம் வருகின்றனர்'' என்கின்றனர், சிறப்பு குழந்தைகளை பயிற்றுவிக்கும், திருப்பூர், துவாரகா கல்வி நிலைய பயிற்றுனர்கள் இந்து, விஜயாபானு.
அவர்கள் கூறியதாவது:
முதலில், தங்கள் குழந்தையின் நிலையை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்; அவர்களை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற குழந்தைகளுடன் எக்காரணம் கொண்டும் ஒப்பிடக்கூடாது. குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்று, வெளியுலகை காண்பிக்க வேண்டும்.
முடக்குவாதம் உள்ளிட்ட நடக்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் மீது, அதிக பாசம் காண்பிக்கும் பெற்றோர், கூடுதலாக உணவு வழங்கி வளர்க்கின்றனர்; அதன் விளைவு, அக்குழந்தையின் உடல் எடை கூடிவிடுகிறது. அத்தகைய குழந்தைகளை நடக்கவைத்து பயிற்சி வழங்குவது சிரமமாக இருக்கிறது; எனவே, உணவு கட்டுப்பாடு என்பது மிக முக்கியம்.
சில சிறப்பு குழந்தைகள், குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது, அவர்களின் குணாதிசயம் முரட்டுத்தனமாக கூட மாறும்; இயல்பு மாறுவர். எனவே, உணவு பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.