/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனக்குறைகளை போக்கும் ஸ்ரீ சுடலை மகாராஜா சுவாமி
/
மனக்குறைகளை போக்கும் ஸ்ரீ சுடலை மகாராஜா சுவாமி
ADDED : ஆக 08, 2024 11:28 PM

சிவபெருமானின் ஒரு அவதாரமாக தென் மாவட்டங்களில் ஸ்ரீசுடலை மகாராஜாவை அப்பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் பகுதியிலும், 1997ம் ஆண்டில், ஸ்ரீசுடலை மகாராஜாவுக்கு கோவில் அமைக்க முடிவானது. அதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரியில் உள்ள கரையாடி சுடலை மாடசாமி கோவிலிலிருந்து மண் எடுத்து வந்து திருப்பூரில் கோவில் அமைக்கும் பணி துவங்கியது.
திருப்பூர், பி.என்., ரோடு, அண்ணா நகர் மேற்கு, தியாகி குமரன் காலனி பகுதியில் சுரேஷ் சுவாமிகள் இப்பணியை முன்னெடுத்தார். கடந்த 1999ல் இக்கோவில் இங்கு அமைந்தது. ஸ்ரீசுடலை மகாராஜா சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கோவில் வளாகத்தில் விக்ன விநாயகர், ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களும் பிரம்ம சக்தி சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தனித்தனி சன்னதியாக அமைந்துள்ளன.
இக்கோவிலின் சிறப்பு, 24 மணி நேரமும் சென்று வழிபாடு நடத்தலாம். தினசரி சிறப்பு பூஜை மற்றும் அலங்காரமும், அருள் வாக்கு கூறும் நிகழ்வும் நடக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் இரவு வரை அருள் வாக்கு கூறும் நிகழ்வை சுரேஷ் சுவாமிகள் நடத்துகிறார். சிறப்பு பூஜை, வழிபாடு மற்றும் ஸ்ரீசுடலை மகாராஜா முன்னிலையில் அருள் வாக்கு கூறும் நிகழ்வும், அன்னதானமும் நடைபெறுகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள் என்ற நம்பிக்கை காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சுடலை மஹாராஜாவை வணங்கி செல்கின்றனர். எந்த விதமான பிரச்னைகள் குறைகள் இருந்தாலும் அதனை ஒரு சீட்டில் எழுதி இந்த கோவிலில் சமர்ப்பித்தால் அந்த குறைகள் விரைவில் தீரும் என்பதால், பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. துன்பம் தந்த குறைகள் நீங்கி, அந்த பக்தர்கள் மீண்டும் இக்கோவிலுக்கு நன்றி தெரிவிக்க வந்து வழிபட்டு செல்கின்றனர்.
கோவிலில் ஆண்டுவிழா, ஆண்டுதோறும் ஆவணி மாதம் சிறப்பாக நடைபெறும். அவ்வகையில், அதற்கான நாள் குறித்து, பவுர்ணமி தினத்தில் நடக்கும் சிறப்பு பூஜையின் போது பூ கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே முடிவு செய்யப்படுகிறது.
அவ்வகையில், நடப்பாண்டு ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா வரும், 24ம் தேதி துவங்கி, 29ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற்றி செல்கின்றனர். குறிப்பாக, ஏராளமான அரசியல் பிரமுகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோரும், ஸ்ரீ சுடலை மகாராஜா சுவாமியை மனமுருக வழிபடுகின்றனர்.