ADDED : செப் 03, 2024 01:26 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நொய்யல் கரை மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக நொய்யலாற்றில் சென்று கலக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், நொய்யல் ஆற்றின் கரையோரம் கழிவு நீர் கால்வாய் கட்டி, சுத்திகரிப்பு மையத்துக்கு செல்லும் வகையில் பணி நடக்கிறது. இதில் ஆலங்காடு அருகே கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. அங்கு நொய்யல் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில், குடிநீர் பிரதான குழாய் அமைந்திருந்தது.
கால்வாய் கட்டும் பணிக்காக இந்த இடத்தில் பிரதான குழாய் இடமாற்றம் செய்ய வேண்டி, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் குடிநீர் குழாய் இடமாற்றப்பட்டது. இருப்பினும் அதன் பின்னும் கால்வாய் கட்டும் பணி மீண்டும் துவங்கவில்லை. கால்வாய் பணி நிறைவடையாமல் அங்கு தார் ரோடு போடும் பணியும் நிறுத்தப்பட்டுக் கிடக்கிறது.
சில மீட்டர் நீளமுள்ள கால்வாய் கட்டும் பணிக்காக ரோடும் போடாமல் பல மாதங்களாக பணி தேங்கிக் கிடக்கிறது. கால்வாய் கட்டும் பணி முடித்து, தார் ரோடு போடும் பணியும் விரைந்து செய்து முடிக்க வேண்டும்.