ADDED : ஆக 16, 2024 11:08 PM
திருப்பூர்:தாராபுரம், அலங்கியம் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜகோபால். அவரது மகன் ஜெரோமியா, 16. குண்டடத்திலுள்ள அரசு பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சுதந்திர தினம் முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. ஜெரோமியா தன் நண்பர்களுடன், தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றார்.
இதில் ஜெரோமியா நீரின் வேகத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் இழுத்துச் செல்லப்பட்டார். மற்ற மாணவர்கள் தப்பினர்.தகவல் அறிந்து தாராபுரம் போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி வரை மாணவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மீண்டும் நேற்று காலை தேடுதல் முயற்சி நடந்தது. இதில், காலை 8:00 மணியளவில் ஜெரோமியா சடலமாக மீட்கப்பட்டார்.தாராபுரம் அமராவதி ஆற்றில் இது போல் அடிக்கடி உயிர் பலி ஏற்படுவது சகஜமாக உள்ளது. போலீசார் எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பையும் மீறி இது போல் குளிக்கச் செல்கின்றனர். தடுப்பு வேலி அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.