/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானியத்துடன் சோலார் மின் உற்பத்தி: விசைத்தறியாளர்கள் வேண்டுகோள்
/
மானியத்துடன் சோலார் மின் உற்பத்தி: விசைத்தறியாளர்கள் வேண்டுகோள்
மானியத்துடன் சோலார் மின் உற்பத்தி: விசைத்தறியாளர்கள் வேண்டுகோள்
மானியத்துடன் சோலார் மின் உற்பத்தி: விசைத்தறியாளர்கள் வேண்டுகோள்
ADDED : மே 11, 2024 01:48 AM
உடுமலை;மானியத்துடன் சோலார் மின் உற்பத்தி மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் உதவினால், மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக, விசைத்தறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2 லட்சத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில், 90 சதவீதம் கூலி அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன.
கூலியில், மூன்றில் ஒரு பங்கு மின் கட்டணத்துக்காக மட்டுமே செலவாகிறது. இதனால், சோலார் மின் உற்பத்தி மேற்கொள்வதன் வாயிலாக, மின் கட்டணத்தை குறைக்கலாம் என விசைத்தறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க பொருளாளர் பூபதி கூறியதாவது: தமிழக அரசு '3ஏ2' என்ற பிரிவின் கீழ், விசைத்தறிக்கு மின் கட்டண சலுகை வழங்குவதால், தொழில் தடையின்றி நடந்து வருகிறது. எதிர்வரும் காலத்தில் மின் கட்டண செலவை நாங்கள் குறைத்தால் தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால், மின்கட்டண உயர்வு ஏற்படும்போதெல்லாம், கட்டண குறைப்புக்காக போராட வேண்டி உள்ளது. விசைத்தறிக்கூடங்களில் சோலார் தகடுகள் பொருத்தி அதன் வாயிலாக, மின் உற்பத்தி மேற்கொள்வதால், மின் கட்டணம் வெகுவாக குறைவதுடன், தமிழக அரசு வழங்கும் மின் கட்டண மானிய செலவும் குறையும்.
எனவே, '3ஏ2' விசைத்தறி கட்டண பயன்பாட்டாளர்களுக்கு, 12 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். சோலார் தகடுகள் அமைக்க ஆகும் செலவில், 50 சதவீத மானியத்தை அரசு வழங்க வேண்டும்.
பவர் டெக்ஸ் இந்தியா திட்டம் வாயிலாக, 50 சதவீத மானியத்தை வழங்கி மத்திய மாநில தொழிலை மேம்படுத்த உதவ வேண்டும். தொழில் மந்தமாக உள்ள காலகட்டங்களில் உற்பத்தியாகும் சோலார் மின்சாரத்தை மின்வாரியமே எடுத்துக் கொள்ள நெட் மீட்டர் பொருத்த வேண்டும். எந்தவித கட்டணங்களும் இன்றி சோலார் மின் உற்பத்திக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.