/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் பணிகள் பாதிப்பு
/
நகராட்சி துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் பணிகள் பாதிப்பு
நகராட்சி துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் பணிகள் பாதிப்பு
நகராட்சி துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 24, 2024 11:08 PM

உடுமலை;உடுமலை நகராட்சியில், துாய்மைப்பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.
உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 17,568 வீடுகள் உள்ளன. வீடுகளில் நேரடியாக சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்குவதற்காக, 178 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குப்பை சேகரிப்பதில், முறைகேடு அதிகளவு நடந்து வருகிறது. தினமும், 21.50 டன் குப்பை சேகரிப்பதற்கு பதில், 15 முதல், 16 டன்கள் மட்டுமே சேகரிக்கப்படுவதோடு, முழுமையாக குப்பை சேகரிப்பதாக கணக்கு காட்டி, நகராட்சியிலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
முழுமையாக குப்பை, கழிவுகள் அகற்றப்படாததால், நகரில், பெரும்பாலான பகுதிகளில், குப்பை, கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
அதே போல், குப்பை சேகரிக்க, 400 வீடுகளுக்கு, ஒரு பேட்டரி வாகனம் என்ற அடிப்படையில், நகராட்சி சார்பில், 30 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.
இவற்றை அந்நிறுவனம் முறையாக பராமரிக்காமல், பயன்படுத்தாததால் பழுதடைந்து, நகராட்சி மாட்டுத்தொழுவத்தில் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்துவதற்கு பதில், துாய்மைப்பணியாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக, தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு, கூடுதல் பளு ஏற்படுகிறது. இந்நிலையில், ஒரு ஆண்டாக, துாய்மைப்பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த துாய்மை பணியாளர்கள் நேற்று, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாவட்ட நிர்வாகம், குறைந்தபட்ச ஊதியமாக, ரூ.638 நிர்ணயித்துள்ள நிலையில், குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.
20 ஆண்டுக்கும் மேலாக நகராட்சியில், துாய்மைப்பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், குறைந்த ஊதியம் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உத்தரவு அடிப்படையில், துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், என நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.