/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காந்தியிடம் நகைகளைக் கொடுத்த சுந்தராம்பாள்; குழந்தையுடன் சிறையில் அடைத்த ஆங்கிலேய அரசு
/
காந்தியிடம் நகைகளைக் கொடுத்த சுந்தராம்பாள்; குழந்தையுடன் சிறையில் அடைத்த ஆங்கிலேய அரசு
காந்தியிடம் நகைகளைக் கொடுத்த சுந்தராம்பாள்; குழந்தையுடன் சிறையில் அடைத்த ஆங்கிலேய அரசு
காந்தியிடம் நகைகளைக் கொடுத்த சுந்தராம்பாள்; குழந்தையுடன் சிறையில் அடைத்த ஆங்கிலேய அரசு
ADDED : ஆக 14, 2024 11:18 PM

திருப்பூர் வீரபாண்டி, குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்துகவுண்டர்; வி.ஏ.ஓ., வாக இருந்தவர்.
இவரது மகள், சுந்தராம்பாள். 1913 அக்., 7ம் தேதி, பிறந்த இவர், அருணாச்சலக் கவுண்டரை திருமணம் செய்தார். தம்பதியருக்கு, மூத்த மகன் பழனிசாமி, இளைய மகன் நாச்சிமுத்து.
திருப்பூர், நொய்யல் ஆற்றங்கரையில், ஹரிசன வேசாநிதி திரட்டும் பொருட்டு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய காந்தியின் பேச்சை கேட்டு உருகிய சுந்தராம்பாள், மக்கள் மீது கொண்ட அன்பால், தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி, காந்தியிடம் கொடுத்து விட்டார்.
அன்று முதல் காந்தி அறிவிக்கும் தீண்டாமை ஓழிப்பு, மதுவிலக்கு, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி வந்தார்.
கதர் உற்பத்திக்காக இடம் வழங்கினார்
கதர் மேல் கொண்ட பற்றால், தன் குடும்பத்துக்கு சொந்தமான, 22.82 ஏக்கர் நிலத்தை வருங்காலத்தில் கதர் உற்பத்தி, விற்பனை மற்றும் பயிற்சி மையத்துக்கு வழங்கி விட்டார். திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம் ஸ்டாப்பில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்க அலுவலகம், காந்தி அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடம், இவரால் வழங்கப்பட்ட இடத்தில் இப்போதும் செயல்பட்டு வருகிறது. இதனை ராஜாஜி துவக்கி வைத்தார் என்பது கூடுதல் சிறப்பு.
1941ல் தனி சத்யாகிரகத்தில் ஈடுபட்டு, தனது மூன்று மாத குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு, சென்னை சென்று போராடினார். கைது செய்யப்பட்டு, மூன்று மாதம் சிறையில் இருந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, ஏழு மாத சிறை தண்டனை பெற்றார். சுந்தராம்பாள் இளைய மகன் நாச்சிமுத்து, வீரபாண்டி, ஊராட்சி மன்ற தலைவராக, ஒன்பது ஆண்டு பணியாற்றினார். சுதந்திர போராட்ட வீராங்கனையான சுந்தராம்பாள், தனது, 95 வயது வயதில், 2007 ஆக., 20ம் தேதி காலமானார்.
திருப்பூர் தியாகிகளில் பலரில், 20ம் நுாற்றாண்டிலும் வாழ்ந்து மறைந்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்களில் சுந்தராம்பாளும் ஒருவர்; இவர், கடந்த, 2007ல், தனது, 95வது வயதில் மறைந்தார்.
வினோபா அடிகளுடன்...
திருப்பூருக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் வந்த வினோபா அடிகள், சுந்தராம்பாள் தோட்டத்தில் தங்கியிருந்தார். சுந்தராம்பாளுடன் அவர் உரையாடி, பழகிய நாட்கள் நினைவாக, இன்றும், அங்கேரிபாளையத்தில், 'காந்தி சுந்தராம்பாள் சேவா மந்திர்' செயல்பட்டு வருகிறது.
சிலை, படிப்பகம் உருவாக்கம்
இவர் வாழ்ந்த வீரபாண்டி பகுதியில் இவருக்கு சிலை அமைக்க திட்டமிட்ட அப்பகுதி மக்கள், திருப்பூர் - பல்லடம் ரோட்டில் உள்ள, காதி வஸ்திராலய வளாகத்தில், ஐந்தரை அடி உயரத்தில், சுந்தராம்பாளுக்கு முழு உருவ கற்சிலை, படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர், தியாகி சுந்தராம்பாள் நுாற்றாண்டு குழுவினர் பராமரித்து வருகின்றனர். சிலை அருகேயே படிப்பகம் உருவாக்கப்பட்டு, புத்தகம், அன்றைய சுதந்திரத்தை நினைவு கூரும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.