/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரத்தை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா
/
சுகாதாரத்தை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா
ADDED : மார் 07, 2025 08:22 PM

உடுமலை:
உடுமலை ஒன்றியம் போடிபட்டியில், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி, உடுமலை நகராட்சியை ஒட்டிய எல்லை பகுதியாக உள்ளது. இதனால் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
மேலும், உடுமலையிலிருந்து, திருமூர்த்தி, அமராவதி, மறையூர், மூணார் செல்வதற்கான பிரதான வழித்தடமாக உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவில் இருப்பதால், பல பகுதிகளிலிருந்தும் மக்கள் போடிபட்டிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த ஊராட்சியை சுத்தமாக வைப்பதற்கும், குப்பைக்கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படாமல் தவிர்க்கவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உடுமலை - போடிபட்டி பிரதான ரோட்டில், இரண்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.
ஊராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட எலையமுத்துார் பிரிவு முதல், பெரியகுளம் பிரிவு வரை பிரதான ரோட்டில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதை தடுப்பதற்கு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பதிவில் தனிநபராலோ, வாகனங்கள் வாயிலாகவோ குப்பை கொட்டினால், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், குப்பைக்கொட்டும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.