/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனிமவள கொள்ளையை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல்
/
கனிமவள கொள்ளையை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல்
கனிமவள கொள்ளையை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல்
கனிமவள கொள்ளையை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல்
ADDED : ஆக 05, 2024 06:42 PM

திருப்பூர்:'கனிமவளக் கொள்ளையை தடுக்க சென்ற தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்துள்ள கத்தாங்கண்ணி கிராமத்தில், எவ்வித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக தோட்டத்தில் கிராவல் மண் எடுத்து விற்றுள்ளனர். தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, களஆய்வு நடத்த அங்கு சென்றார். போலீசுக்கு தகவல் அளித்து மேல்நடவடிக்கை எடுக்கவும், பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலர், தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், ஆளும்கட்சி பிரமுகர்களின் அழுத்தம் காரணமாக, இவ்விவகாரத்தில் வழக்கு பதியாமல், கிராவல் மண் எடுத்தவர்களை பாதுகாக்க சிலர் முயற்சித்து வருவதாக, திருப்பூர் கலெக்டரிடம் நேற்று விவசாயிகள் புகார் அளித்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலர் சதீஷ்குமார் கூறுகையில், ''தாசில்தாருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். தாசில்தாரே மிரட்டப்படுகிறார் என்றால், பாமர மக்களின் நிலை என்னவாகும்?
''தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கனிமவள கொள்ளை தொடர்பான புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்,'' என்றார்.