/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரிப்பணத்தில் 'நிவாரணம்': விவசாயிகள் ஆவேசம்
/
வரிப்பணத்தில் 'நிவாரணம்': விவசாயிகள் ஆவேசம்
ADDED : ஜூன் 26, 2024 10:37 PM

பல்லடம் : கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய், மக்களின் வரிப்பணத்தில் இருந்து எப்படி நிவாரணம் கொடுக்கலாம் என்று விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கலால் உதவி ஆணையர் ராம்குமார் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், கள்ளச்சாராயம் குடித்து இறந்த வர்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக, அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகள் மின்சாரம் தாக்கியோ, மரத்திலிருந்து தவறி விழுந்தோ, பாம்புகடித்தோ உயிரிழந்தால், ஆட்சியாளர்கள் - அதிகாரிகள் உட்பட யாருமே கவலைப்படுவதில்லை. நாட்டிலுள்ள, 120 கோடி மக்களுக்கும் உணவு அளிக்கும் பணியை செய்து வருகிறோம். எங்களையெல்லாம் பார்த்தால் மனிதராக தெரியவில்லையா?
கள்ளச்சாராயம் விற்பதும் குடிப்பதும் குற்றம். அப்படியிருக்க, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த நிதி போதாது என அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டி நிற்கின்றன.
விவசாயிகள், பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அரசுக்கு செலுத்திய வரிப் பணத்தில் இருந்து, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எப்படி நிவாரணம் கொடுக்கலாம்?
இது, குற்ற சம்பவத்தை அரசே ஊக்கப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.