/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேரத்தை பயன்படுத்தும் வல்லமை நிரந்தர வெற்றியாளராக மாற யுத்தி
/
நேரத்தை பயன்படுத்தும் வல்லமை நிரந்தர வெற்றியாளராக மாற யுத்தி
நேரத்தை பயன்படுத்தும் வல்லமை நிரந்தர வெற்றியாளராக மாற யுத்தி
நேரத்தை பயன்படுத்தும் வல்லமை நிரந்தர வெற்றியாளராக மாற யுத்தி
ADDED : மார் 31, 2024 12:03 AM

'ஜவுளித்துறையில் கொட்டி கிடைக்கும் வாய்ப்புகள்' எனும் தலைப்பில், நிப்ட் - டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம் பேசியதாவது:
உயர்கல்வி விஷயத்தில், மாணவர்களுக்கு தெளிவு இல்லாத குழப்ப நிலை கூடாது. ஜவுளித்துறை அழிவில்லாத துறை. மனிதன் வாழும் வரை ஆடையின் தேவை இருந்து கொண்டே இருக்கும். துறையும் அபரிமிதமாக வளர்ந்து கொண்டே இருக்கும். நாம் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து விதமான ஆடைகளை பயன்படுத்துகிறோம்.
இத்துறையில் மாணவராக இருந்து, வேலைவாய்ப்பு பெற்ற செழித்து முன்னேற அதீத ஆர்வம் வேண்டும். உங்களை நீங்களே உருவாக்கும் சிற்பியாக மாற வேண்டும். வாழ்வில் சுயஒழுக்கம், படிப்பு மற்றும் தொழிலில் அர்ப்பணிப்பு, சிக்கலான தருணத்தில் முடிவெடுக்கும் திறன், வெற்றி பெற்றாகவே வேண்டும் என்ற வைராக்கியம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.
உனக்கு நீயே போட்டியாக இருக்க வேண்டும். உன்னை நீயே கேள்வி கேட்க வேண்டும். சுயமாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நேரத்தை கையகப்படுத்தும் வல்லமை படைத்தவர்கள் நிரந்தர வெற்றியாளராக மாறுகின்றனர்.
நம் பெற்றோர் நமக்காக நேரத்தை ஒதுக்கி, இங்கு வந்து இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை வெற்றியாளராக மாற்ற, நீங்கள் வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும். என்னால் முடியும் என பொறுப்பு உணர்ந்து, தலைமை பண்புடன் நடப்பது வேறு; தலைக்கனம் வேறு. தனிமனித வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியம்.
அதற்காக முழுமையாக அர்பணித்து, நீங்கள் முயற்சித்தால், நிச்சயம் சாதிக்கலாம். ஜவுளித்துறையில் ஏராளமாக படிப்புகள், பல வேலைவாய்ப்புகள் எல்லா நிலையிலும் கொட்டி கிடக்கிறது. வாருங்கள், வளருங்கள் என வரவேற்கிறேன். திருப்பூரை போல் நீங்களும் செழித்து வளர வேண்டும்.
இவ்வாறு, ராஜாசண்முகம் பேசினார்.

