/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டில் இயங்கிவந்த சாய ஆலை குடிநீர் இணைப்பு துண்டிப்பு
/
வீட்டில் இயங்கிவந்த சாய ஆலை குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வீட்டில் இயங்கிவந்த சாய ஆலை குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வீட்டில் இயங்கிவந்த சாய ஆலை குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ADDED : செப் 01, 2024 01:33 AM
திருப்பூர்;திருப்பூர், மண்ணரை பகுதியில் வீட்டில் ரகசியமாக இயங்கிய சாய ஆலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து குழாய் இணைப்பு துண்டித்து, அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர், மண்ணரை, சத்யா காலனியில் ஒரு வீட்டில் துணிகளுக்கு சாயமேற்றும் ஆலை ரகசியமாகச் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி குழாய் இணைப்பில் மோட்டார் இணைத்து நீரை அதிகளவில் உறிஞ்சி எடுத்து, இத்தொழிற்சாலை நடந்துள்ளது.
மேலும், சாயக்கழிவு நீர் குழாய் மூலம் மழை நீர் சேகரிப்புக்கு தோண்டிய குழியில் இறக்கப்பட்டும் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல உதவி கமிஷனர் வினோத் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் போது, விதிமீறல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, உரிய உரிமம் பெறாமல், குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தியது குறித்து, 3 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என, வீட்டின் உரிமையாளர்கள் சரோஜா, ரஞ்சித்குமார், சரவணகுமார் மற்றும் ரூபலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
விதிமுறைக்கு புறம்பாகப் பயன்படுத்தியதால் குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.
மேலும் சாயக்கழிவு நீரை நிலத்தில் தேக்கியும், மாநகராட்சி வடிகாலில் வெளியேற்றி மாசு ஏற்படுத்தியதற்காக, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.