ADDED : மார் 08, 2025 11:08 PM

'காடுகளையும், காட்டு விலங்குகளையும் காப்போம்...' என்ற அறைகூவலுடன், கடந்த, 3ம் தேதி 'உலக காட்டுயிர் தினம்' கடைபிடிக்கப்பட்டது. 'அடர்ந்த வனம், அவற்றில் வாழும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவது தான், காட்டுயிர் நாளின் முக்கியத்துவம்' என்ற பார்வையை கடந்து, காட்டுயிர் என்றாலே சிங்கம், புலி, கரடி, சிறுத்தை என, பெரிய பெரிய விலங்கினங்கள் தான், கண்முன் வந்து செல்லும்.
ஆனால், 'வீடுகளிலும், வீட்டை சுற்றிலும் வாழும் பல்லி, கரையான், எறும்பு உள்ளிட்ட சிறு சிறு விலங்கினங்கள் கூட காட்டுயிர்கள் தான்' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ''இந்த இயற்கை சமநிலையின், முதல் விவசாயி மற்றும் முதல் மேய்ப்பன் என்ற பெருமைக்கு சொந்தக்காரனாக, எறும்புகள் திகழ்கின்றன'' என்கிறார், சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம்.
அவர் கூறியதாவது:
வீடுகளின் சமையலறையில் காணப்படும் கரையான் பூச்சிகளை உணவாக்கி அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது பல்லிகள் தான். ஆனால், கரையான்களை அழிக்க, வீரியமிக்க மருந்துகளை மக்கள் தெளிக்கின்றனர். அந்த மருந்தை சுவாசிப்பதால், கரையான்களுக்கு உடனடி மரணம் நிகழ்கிறது. அந்த விஷத்தன்மை நிறைந்த புகையை மனிதர்களும் சுவாசிக்கின்றனர்; அதன் பாதிப்பு மெல்ல, மெல்ல தெரிய வரும்.
வீடுகளை சுற்றி தென்படும் எறும்புகள் தான், முதல் விவசாயி மற்றும் முதல் மேய்ப்பன் என்றும் சொல்லலாம். அதற்கு காரணம், எறும்புகள், இலைகளை வெட்டி எடுத்துச் சென்று, பூஞ்சையடைய வைத்து, தங்களுக்கான உணவை உற்பத்தி செய்து கொள்கின்றன. அசுவினி என்ற பூச்சி இலைச்சாற்றை உணவாக்கி கொள்கிறது.
அந்த பூச்சி வெளியேற்றும் எச்சம், இனிப்பு சுவை கொண்டதாக இருப்பதால், அதனை எறும்புகள் தங்களுக்கு உணவாக்கிக் கொள்கின்றன. அந்த பூச்சிகளை, எறும்புகள்தான் பேணி பாதுகாக்கின்றன.
இயற்கை சமநிலையில், காடுகளில் வாழும் காட்டுயிர்கள் மட்டுமின்றி, வீடுகளில் வாழும் சின்னஞ்சிறு உயிர்களும் முக்கியப்பங்காற்றுகின்றன. இயற்கை சமநிலைக்கு இம்சை ஏற்படுத்தாமல் கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.