/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்காத அரசு! தொடர் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் திட்டம்
/
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்காத அரசு! தொடர் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் திட்டம்
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்காத அரசு! தொடர் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் திட்டம்
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்காத அரசு! தொடர் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் திட்டம்
ADDED : ஜூலை 06, 2024 10:58 PM
உடுமலை:உடுமலை அருகே, மூடப்பட்டுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க தேவையான நிதி ஒதுக்க கோரி, கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1961ம் ஆண்டு, உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டது. கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
ஆண்டுக்கு, 11 மாதங்கள், தினமும், 2,500 டன் கரும்பு அரவை, அதிக பிழிதிறன் காரணமாக சர்க்கரை உற்பத்தியில் சிறப்பாக இயங்கி வந்தது. 1994ம் ஆண்டு, துணை ஆலையாக, ஆண்டுக்கு, 1.65 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எரிசாராய ஆலையும் அமைக்கப்பட்டது.
பழமையான இந்த ஆலை இயந்திரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆண்டுதோறும் ஆலை இயக்கத்தில் சிக்கல், பிழிதிறன் குறைவு என பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் மூடப்பட்டது.
இதனால், விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் விவசாய கூலி தொழிலாளர்கள் பாதித்தனர். இந்நிலையில், ஆலையை புனரமைக்க தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாலதண்டபாணி கூறியதாவது:
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக புனரமைக்க, 80 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடும், ஆலை இயங்கினால், ஆறு ஆண்டுகளில் அக்கடனை திரும்ப செலுத்தும் வழிமுறைகள் குறித்தும், விரிவான அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்காததால், பாரம்பரியமும், சிறப்பும் கொண்ட சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதித்துள்ளனர்.
எனவே, ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க வலியுறுத்தி, வரும், 11ம் தேதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதற்கும் தீர்வு கிடைக்காவிட்டால், விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆலை முன் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, கூறினார்.