/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெரியகுளத்தில் பழமையை பறைசாற்றும் 'துாம்பு'; நீர்மட்டம் குறைந்ததால் தென்படுகிறது
/
பெரியகுளத்தில் பழமையை பறைசாற்றும் 'துாம்பு'; நீர்மட்டம் குறைந்ததால் தென்படுகிறது
பெரியகுளத்தில் பழமையை பறைசாற்றும் 'துாம்பு'; நீர்மட்டம் குறைந்ததால் தென்படுகிறது
பெரியகுளத்தில் பழமையை பறைசாற்றும் 'துாம்பு'; நீர்மட்டம் குறைந்ததால் தென்படுகிறது
ADDED : மார் 06, 2025 10:13 PM

உடுமலை; உடுமலை பெரியகுளத்தில், நீர் இருப்பு குறைந்த நிலையில், நீர் மேலாண்மையை பறைசாற்றும் பழமையான துாம்பு எனப்படும், கல்மானி தென்படுகிறது.
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் குளங்கள் பெரிதும் உதவி வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள ஏழு குள பாசன திட்ட குளங்கள், பழங்கால நீர் மேலாண்மைக்கான சான்றாக இன்றளவும் காணப்படுகிறது.
நீரோட்ட இயல்பை கண்டறிந்து, அடுக்குத்தொடராக, அடுத்தடுத்து குளங்கள் அமைத்து, ஒவ்வொரு குளமாக நிரப்பி, உபரி நீர் ஓடை வழியாக வெளியேற, கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில், 404 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுளத்தில், நீர் மேலாண்மைக்காக முன்னோர்களால், அமைக்கப்பட்ட குமிழி துாம்பு எனப்படும் கற்துாண் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இக்கட்டமைப்பு, குளத்தில் இருந்து தேவையான அளவுக்கு நீரை, விவசாயத்துக்கு பயன்படுத்தவும், மழைக்காலத்தில் உபரி நீரை வெளியேற்றவும் பயன்பட்டுள்ளது.
இந்த துாணை ஒட்டி, துளைகளுடன் கூடிய கல் பெட்டி அமைத்துள்ளனர். நீரோடி, சேரோடி என்ற அமைப்புகளுடன், இந்த கட்டமைப்பு இருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் தேவை என்றால், நீரோடி துளையில் உள்ள கல்லை எடுத்து விடுவார்கள்.
அப்போது குளத்துநீர், நீரோடி துளை வழியாக, 80 சதவீதம், சேரோடி வழியாக, 20 சதவீதம் சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால், குளத்தின் நீர்த்தேக்க பரப்பில், அதிக மண் தேங்குவது தடுக்கப்படும்.
குளத்தில் தேங்கியுள்ள சேறு, அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து, தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.
பயிர்களுக்கு அதிக சத்தாக இருக்கும், மண் விளை நிலங்களுக்கு செல்வதுடன், துார்வாரும் பணியும் குறையும். இந்த துாம்பு, அந்த குளத்தில் நீர் இருப்பு நிலவரங்களை தெரிந்து கொள்ளும், அளவு மானியாகவும் பயன்பட்டுள்ளது.
தற்போது, குளத்தின் கரைகளில், மதகுகள் அமைக்கப்பட்ட பின், குமிழி துாம்புகள் பயன்பாடு இல்லாமல், புறக்கணிக்கப்பட்டன. துாம்பை ஒட்டி அமைக்கப்பட்ட கல்பெட்டி, சேரோடி, நீரோடி ஆகிய அமைப்புகள் முற்றிலுமாக சிதைந்து மாயமாகி விட்டன.
தற்போது, குமிழி துாம்பின் துாண்கள் மட்டுமே, உயரமாக காணப்படுகின்றன. தற்போது, பெரிய குளத்தில், மொத்தமுள்ள, 11.55 அடியில், 7.80 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால், பழங்காலத்தில் அமைக்கப்பட்ட, துாம்பு தெரிகிறது.
இவ்வாறு, உடுமலை பகுதியிலுள்ள ஒரு சில குளங்களில் உள்ள, இத்தகைய கட்டமைப்புகள் சிதிலமடைந்து முற்றிலுமாக காணாமல் போகும் முன், அவற்றை சீரமைத்து, தற்போதைய சந்ததியினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இது போன்ற சிறந்த அடையாளங்களை, தெரிந்து கொள்ளும் வகையில், அரசுத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.