/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடிப்பெருக்கில் நிரம்பி வழிந்த ஆண்டிபாளையம் குளம்
/
ஆடிப்பெருக்கில் நிரம்பி வழிந்த ஆண்டிபாளையம் குளம்
ADDED : ஆக 04, 2024 05:24 AM

திருப்பூர்: ஆடிப்பெருக்கு நாளில், ஆண்டிபாளையம் குளம் நிரம்பி வழிந்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர், ஆண்டிபாளையம் குளத்துக்கு, மங்கலம் நல்லம்மன் தடுப்பணை மற்றும் ஒட்டணை பகுதிகளில் இருந்து, தனி வாய்க்கால் வழியாக, நொய்யல் தண்ணீர் வருகிறது. இரண்டு வாய்க்கால்களில் தண்ணீர் வருவதால், ஆண்டிபாளையம் குளம் வேகமாக நிரம்பியது.
கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, தண்ணீர் அதிக அளவு வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று குளம் முழு கொள்ளளவை எட்டியது; தொடர்ந்து, உபரிநீர் வெளியேறி, வாய்க்கால் வழியாக மீண்டும் நொய்யலுக்கு செல்கிறது. ஆடிப்பெருக்கு நாளான நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு குளம் நிரம்பி வழிந்ததால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளக்கரையில் உள்ள, ஸ்ரீவரதராஜபெருமாள் மற்றும் வேணுகோபால சுவாமிக்கு, குளத்து தண்ணீரை ஊற்றி, பொதுமக்கள் வழிபட்டனர்.
மாணிக்காபுரம் குளம்
முதலிபாளையம் ஊராட்சி எல்லையில் உள்ள, மாணிக்காபுரம் குளமும், முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காசிபாளையம் தடுப்பணையில் இருந்து, மழைநீர் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் முழுவதும், குளம் காக்கும் அமைப்பினர், குளத்துக்கு செல்லும் வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்தனர்.
இதன்காரணமாக நொய்யல் தண்ணீர் குளத்துக்கு சென்ற கொண்டிருக்கிறது. இந்நிலையில், குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், கடல் போல் காட்சியளிக்கிறது.
மூளிக்குளத்துக்கு செல்லும் வாய்க்கால், பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணி காரணாக, கருமாரம்பாளையம் - மணியகாரம்பாளையம் நொய்யல் பாலம் அருகே, வாய்க்கால் துண்டிக்கப்பட்டது.
பல மாதங்களாக போராடியும் பணிகள் நடக்கவில்லை. குளத்தை பராமரிக்கும் திருப்பூர் வேர்கள் அமைப்பினர், கடந்த ஒரு வாரமாக வாய்க்காலை துார்வாரி, குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றனர். வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளது.
அணைக்கட்டு பகுதியில் இருந்து வாய்க்கால் பிரியும் இடத்தில், மாநகராட்சி கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டதால், தண்ணீர் வரத்து தடைபட்டது. அதற்கும், விரைவில் கான்கிரீட் அமைத்து, வாய்க்காலை செப்பனிட மாநகராட்சி முன்வந்துள்ளது. அதேபோல், ஆற்றுப்பாலம் அருகே, வாய்க்காலை இணைக்கும் பணியும் இரவு, பகலாக நடந்து வருகிறது.
குளமும் முழுமையாக துார்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது; வாய்க்கால் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல தொடர்ந்து பணியாற்றி வருவதாக, வேர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.