/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை வளம் பாதுகாப்பு பொறுப்பு பொறுப்பில் இருப்பவர்களையே சேரும்!
/
இயற்கை வளம் பாதுகாப்பு பொறுப்பு பொறுப்பில் இருப்பவர்களையே சேரும்!
இயற்கை வளம் பாதுகாப்பு பொறுப்பு பொறுப்பில் இருப்பவர்களையே சேரும்!
இயற்கை வளம் பாதுகாப்பு பொறுப்பு பொறுப்பில் இருப்பவர்களையே சேரும்!
ADDED : மார் 02, 2025 04:54 AM

திருப்பூர்: ''இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, பொறுப்பில் இருப்பவர்களையே சேரும்'' என்று, பட்டிமன்ற நடுவர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட 10ம் ஆண்டு விழா மற்றும் 11ம் ஆண்டு நாற்று பண்ணை துவக்க விழா ஆகியன அவிநாசி அருகேயுள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், 'இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களா... பொறுப்பில் இருப்பவர்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, நடுவராக இருந்தார். பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவை சேர்ந்த கவுதம் ஆகியோர், 'பொறுப்பில் இருப்பவர்களே..' என்ற அணியில் பேசினர்.
கோவையை சேர்ந்த தனபால் மற்றும் குருஞானாம்பிகா ஆகியோர், 'பொதுமக்களே...' என்ற அணியில் பேசினர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நடுவர் ராஜா, ''இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது பொறுப்பில் இருப்பவர்களே' என்று தீர்ப்பு வழங்கினார்.
பாரதி பாஸ்கர் பேசுகையில், ''மணி நீரும், மண்ணும், மலையும், அணிநிழல் காடும் உடையது அரண்' என்று வள்ளுவர் கூறியுள்ளார். அரண் என்பது பாதுகாக்க வேண்டியது; அது பொதுமக்களிடம் கடமையா, அரசாங்கத்தின் கடமையா என்று பார்க்கும் போது. நாட்டுக்கான பாதுகாப்பை காவல் செய்ய வேண்டியது பொறுப்பில் இருப்பவர்களின் கடமை. மரம் வளர்த்தது மட்டுமல்ல, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் மனசாட்சியை உலுக்கியுள்ளனர்,'' என்றார்.
நடுவர் ராஜா பேசியதாவது:
நடுநிலையில் பேச முடியாத பரிதாப சூழ்நிலையில் தமிழகம் இருக்கிறது; ஆனால், சொல்ல வேண்டியதை, சொல்லித்தான் ஆக வேண்டும். இருதரப்பினரும் சிறப்பாக, தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அடுத்த தலைமுறையினர் இடையே, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. தேவையில்லாத போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்; மழைநீர் சேகரிப்பை உணர்வுப்பூர்வமாக செய்ய வேண்டும்.
பொதுமக்களால், முழு அளவில் செயல்பாட்டுக்கு வர முடியாது. பொறுப்பில் உள்ளவர்களே, கடுமையான சட்ட விதிகளை உருவாக்கி, இயற்கையை பாதுகாக்கலாம். கடும் சட்டங்கள் மூலமாக, இயற்கை பேணப்படும். அதன்படி, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, பொறுப்பில் இருப்பவர்களே சேரும்.
இவ்வாறு அவர் பேசினார்.