/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களை கலங்கடிக்கும் ஆகாயத்தாமரை; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
/
குளங்களை கலங்கடிக்கும் ஆகாயத்தாமரை; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
குளங்களை கலங்கடிக்கும் ஆகாயத்தாமரை; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
குளங்களை கலங்கடிக்கும் ஆகாயத்தாமரை; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஆக 07, 2024 10:53 PM
உடுமலை : ஏழு குள பாசன திட்ட குளங்களில், ஆகாயத்தாமரை செடிகளால் ஏற்படும் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகே அமைந்துள்ள ஏழு குள பாசன திட்ட குளங்களால், 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. மேலும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் சாகுபடிக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன.
திருமூர்த்தி அணையிலிருந்து, இக்குளங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. மீன் வளர்ப்பு வாயிலாக குளங்களிலிருந்து பொதுப்பணித்துறைக்கு வருவாயும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சில குளங்களில், குடியிருப்புகளின், கழிவு நீர் நேரடியாக கலப்பதால், பல்வேறு பிரச்னைகள், ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, பெரியகுளம், செங்குளம் உட்பட அனைத்து குளங்களிலும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து வருகின்றன.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: நீர் நிலைகளில், பரவும், ஆகாயத்தாமரை செடிகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, இச்செடிகளில், கோடை காலத்தில், இலைகளின் வழியாக நீராவிப்போக்கு அதிகளவு இருக்கும்.
இதனால், குளத்தில், நீர்மட்டம் வேகமாக குறையும். சூரிய ஒளி தண்ணீரில் ஊடுருவ தடையாக இருப்பதால், நீர் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சியை தடுக்கும்.
இத்தாவரம் இறந்து மட்கும் போது, தண்ணீர் மாசடையும். கொசுக்கள் உற்பத்திக்கு நல்ல சூழ்நிலையை இச்செடிகள் ஏற்படுத்தி கொடுக்கின்றன. எனவே, இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
'ஆகாயத்தாமரை செடிகள் பரவினால், ஷட்டரில் தண்ணீர் திறக்கும் போது, அவற்றில் அடைப்பு ஏற்படுகிறது. பல்வேறு பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அவற்றை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,' என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்பிரச்னை குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.