/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை சிரவை ஆதீனம் கவலை
/
காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை சிரவை ஆதீனம் கவலை
காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை சிரவை ஆதீனம் கவலை
காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை சிரவை ஆதீனம் கவலை
ADDED : ஆக 07, 2024 12:18 AM

பல்லடம்,:பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், ஆயிரம் பனை நாற்றுகள் நடும் நிகழ்ச்சி பல்லடத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வனம் அமைப்பு தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் சவுமியா, வனம் அமைப்பு செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி பேசியதாவது:
மரங்கள், மலைகளை அழித்து, இயற்கை வழித்தடங்களை மாற்றி அமைத்ததால் துன்பங்களை சந்திக்கிறோம். விலங்குகளின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, இயற்கை துன்புறுத்துவதாக விலங்குகள் மேல் பழி போடுகிறோம். நன்மையாக இருந்தால் என்னுடையது என்று கூறும் நாம், தீமையானால் மற்றவர்களை கை காட்டுகிறோம்.
இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால் விளைவுகளை இன்று சந்திக்கிறோம். போதும் என்ற மனநிலை யாருக்கும் இல்லை. நம் முன்னோர்கள் போதும் என்று இருந்ததால், நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தார்கள். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற பழமொழி சமீபத்திய இயற்கை பேரிடருக்கு உதாரணம்.
காற்றைக் கூட காசு கொடுத்து வாங்கும் சூழல் உருவாகி வருகிறது. ஒரு காலத்தில் வழிபாட்டுக்கு உகந்ததாக இருந்த கூவுமும், நொய்யலும் இன்று இப்படி ஆனதற்கு நாம் ஒவ்வொருவருமே காரணம். இதை தடுக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் பேசுகையில், ''திருமணம், பிறந்தநாள் என எத்தனையோ செலவு செய்கிறோம். ஆனால், உண்மையில் அடுத்த தலைமுறைக்கு என நாம் சேர்த்து வைக்கும் சொத்து என்பது மரங்கள் நடுவது தான்,'' என்றார்.