/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடவுளின் பிரதிநிதி தான் 'ஆசிரியர்'
/
கடவுளின் பிரதிநிதி தான் 'ஆசிரியர்'
ADDED : செப் 01, 2024 02:25 AM
திருப்பூர்;செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம்.
ஆசிரியர்கள், சமுதாயத்தின் சிற்பிகள். நிறைய சிலைகளை வடித்து, பிறர் வழிபடும் வகையில், புனிதத்தை ஊட்டுகின்றனர். சிலையை உருவாக்க, கற்களில் தேவையில்லாதவையை மட்டும் நீக்கி, உருவாக்குவர். ஆசிரியர்கள், நமக்கு தேவையில்லாதவற்றை நீக்கி, நம்மை உருவாக்கி விடுகின்றனர்.
திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் கூறியதாவது:
'குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாட்சாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ' என்பது எளிமையான, ஆழமான அர்த்தத்தை கூறுகிறது. இவ்வுலகம் மூன்று வித சக்திகளால் இயக்கப்படுகிறது. ஒரு சக்தி படைத்தல், இன்னொன்று படைத்த பொருளை காத்தல், மூன்றாவது அழித்தல் (மீண்டும் அதை பூரண நிலைக்கு கொண்டு வருதல்). இதை தான் சுருக்கமாக கடவுள் என்கிறோம்.
மூன்று தெய்வங்களுக்கு சமமான ஒருவர் உலகத்தில் இருக்கிறார் என்றால், அது நம்முடைய குரு தான். நமக்கு போதிக்க கூடிய ஆசிரியராக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். படிப்படியாக நாம் வளர, வளர பல்வேறு விதமான ஆசான்களை சந்திக்கிறோம். வயதுக்கும், அறிவுக்கும் தகுந்த மாதிரியான குருக்களை பார்க்கிறோம்.
அனைத்தையும் கற்று முடித்து உலக வாழ்க்கையில் ஈடுபடும் போது, அவர்கள் கற்று கொடுத்த விஷயம் தான் வாழ்நாள் முழுவதும் உதவும், வழிகாட்டும். கடவுள் நேராக வராமல், கடவுள் தன்னுடைய ஒரு பிரதிநிதியை அனுப்புகிறார். ஒவ்வொருவருக்கும் பிரதிநிதி என்பவர், ஆசிரியர் தான். ஒரு தீபம், லட்ச தீபங்களை ஏற்ற முடியும். ஒரு ஆசிரியர் பல ஆயிரம் ஒளிர்விக்க முடியும்.
இந்த குரு ஸ்லோகத்தின் அடுத்தடுத்து வரும் வரிகள், அறியாமை என்கின்ற படலத்தை நீக்கி, ஞானத்தை தருபவர் தான் குரு. குரு என்றால், இருளை நீக்கி, வெளிச்சத்தை தருபவர். வாழ்க்கையில் தடுமாறாமல், திசைமாறாமல் போக வழிகாட்ட கூடியவர்தான் ஆசிரியர்.
---
செந்தில்நாதன்