/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அப்பர் குருபூஜை விழா; சிவனடியார்கள் பரவசம்
/
அப்பர் குருபூஜை விழா; சிவனடியார்கள் பரவசம்
ADDED : மே 04, 2024 12:09 AM

திருப்பூர்:திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை விழா, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று நடந்தது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், 'அப்பர்' என்று அழைக்கப்பட்டவருமான, திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை, சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் நடைபெறுகிறது. அதன்படி, சித்திரை சதய நட்சத்திர நாளான நேற்று, திருநாவுக்கரசர் குருபூஜை விழா நேற்று நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், குருபூஜை விழா நடந்தது. கோவில் பிரகாரத்தில் உள்ள திருநாவுக்கரசு நாயனார், மகா மண்டபத்தில் உள்ள நால்வரில் ஒருவராக அருள்பாலிக்கும் அப்பர் சிலை மற்றும் உற்சவமூர்த்திக்கு, அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது.
உற்சவமூர்த்தி உள்பிரகாரத்தை வலம் வந்து, இறைவனுடன் இரண்டறக்கலந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேவாரம், திருமுறை பாராயணம் செய்தும், திருத்தொண்டத்தொகை பாடல்களை பாராயணம் செய்தும், சிவனடியார்களும், பக்தர்களும் வழிபட்டனர்.
அவிநாசி கோவில்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், திருத்தாண்டக வேந்தர் திருநாவுக்கரசு சுவாமியின் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில், திருநாவுக்கரசர் சுவாமியின் பதிகங்கள் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அப்பர் சுவாமிகள் இறைவனோடு இரண்டறக் கலக்கும் வைபவமும் நடைபெற்றது. இதில், கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் மற்றும் இசை கலைஞர்கள் பங்கேற்று பண்ணிசையோடு முற்றோதல் நடைபெற்றது. இதில், சிவனடியார்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.