தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி...காட்சி பொருளானது!: செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி...காட்சி பொருளானது!: செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி...காட்சி பொருளானது!: செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 23, 2026 03:24 AM

ADDED : ஜூலை 22, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 03:24 AM ADDED : ஜூலை 22, 2026 04:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மக்களை எச்சரித்து, உயிரிழப்புகளை தவிர்க்க, நிறுவப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கருவி, பல ஆண்டுகளாக செயல்படாமல் வீணாக உள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை அருகே திருமூர்த்திமலை, பசுமையான மலைகளுக்கு மத்தியில், 960 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி, மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளி வரும் அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை என, பிரசித்தி பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.

இங்கு, ஆண்டு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மலைமேல் அமைந்துள்ள அருவிக்கு, குருமலை, குழிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீர், காட்டாறுகள் வழியாக வந்து, அருவியாக விழுகிறது.

மலைப்பகுதிகளில், கனமழை பெய்யும் போது, அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த, 2008 மே 25ல், திடீர் வெள்ளப்பெருக்கில், பஞ்சலிங்க அருவியில் குளித்துக்கொண்டிருந்த, 13 பேர் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார்கள்.

2011ல் கருவி பொருத்தம் இதனையடுத்து, அருவியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், 2011ல், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், பஞ்சலிங்கம் அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டது.

அருவி பகுதியில், தானியங்கி முறையில் இயங்கும் கருவி பொருத்தப்பட்டு, அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால், நீர் வழித்தடத்தில் பொருத்தப்பட்டுள்ள 'சென்சார்' கருவி, 'கவனம்', 'அலர்ட்', 'எச்சரிக்கை' என்ற மூன்று நிலைகளில், அலாரம் ஒலிப்பதோடு, உடனடியாக கோவில் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, இதன் வாயிலாக இணைக்கப்பட்ட ஒலிபெருக்கியின் வாயிலாக கேட்கும் வகையில், கருவி அமைக்கப்பட்டது.

மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை, வளம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், நவீன தொழில் நுட்பத்தில், தானியங்கி முறையில், இந்த வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டது.

அருவிக்கு செல்லும் பல இடங்களில், ஒலி பெருக்கி அமைத்து, கட்டுப்பாட்டு மையத்துக்கும், கோவில் அலுவலகத்திற்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் தெரிவிக்கும்.

அருவிக்கு நீர் வரத்து காணப்படும் குருமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளின், வானிலை குறித்த நிலவரமும், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் அலுவலகத்துக்கு கிடைக்கும், வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது, சுற்றுலா பயணியரை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகள் எளிதாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தானியங்கி வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டு, ஒரு சில ஆண்டுகள் செயல்பட்ட நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, கருவிகள் செயல்படாததோடு, தானியங்கி வெள்ள அபாய எச்சரிக்கை கருவி கட்டமைப்புகள் ஒட்டுமொத்தமாக முடங்கியது.

அருவி மேல், கம்பி கூண்டுக்குள் உள்ள அலாரம் கருவி மட்டும் தற்போது காட்சி பொருளாக உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை கருவி செயல்படாததால், மழைக்காலங்களில், மலைமேலுள்ள குருமலை, மேல்குருமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் கொடுக்கும் தகவல் மற்றும் மேகமூட்டம், மழைப்பொழிவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக அருவியிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதனால், மழை நாட்களில் பெரும்பாலும் அருவிக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டால், கோவில் பணியாளர்கள் 'விசில்' அடித்து வெளியேற்றும் பழைய நடைமுறையே தொடர்கிறது.

அருவி இரைச்சலுக்கு இணயைான ஒலிபெருக்கி, வெள்ள அபாய எச்சரிக்கை 'சைரன்' வசதிகள் இல்லை.



முக்கியத்துவம் வாய்ந்த, இந்த கருவியை சீரமைக்க, பருவ மழைகள் துவங்குவதற்கு முன், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us