/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உலகம்' நம் வசம்; இதயங்களை வென்ற ரோகித் படை!
/
'உலகம்' நம் வசம்; இதயங்களை வென்ற ரோகித் படை!
ADDED : ஜூலை 01, 2024 02:49 AM

'டி20' உலக கோப்பை போட்டியின் பரபரப்பான இறுதியாட்டத்தில், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வாகை சூடியது. பதினேழு ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு, கோடிக்கணக்கான நம் நாட்டு ரசிகர்களிடம் இருந்து பாராட்டு மழை பொழிகிறது. மனம் திறந்து பாராட்டும் திருப்பூர் ரசிகர்கள், வெற்றிக்கான காரணங்களை ஆர்வம்பொங்க பட்டியலிடுகின்றனர்.
நெகிழ்ச்சித் தருணம்
சிவகுமார், சோமனுார்: 'ஈகோ'வில் சிக்காத அணி இது. ரோகித்-, கோலியின் வெளிப்படையான, ஆத்மார்த்தமான, அர்ப்பணிப்புடனான 'டீம் ஸ்பிரிட்', இந்தச் சாதனைக்குக் காரணம். தலைமைப்பயிற்சியாளர் டிராவிட்டின் வெற்றிக்களிப்பை இதுவரை இப்படிக் கண்டதில்லை. கோலி வெற்றிக் கோப்பையை டிராவிட்டிடம் கொடுத்து மகிழ்ந்தது நெகிழ்ச்சியான தருணம்.
மூவர்ணக்கொடியேந்தி...
கதிரேசன், காளிபாளையம்: பயிற்சியாளர் அளித்த நுணுக்கங்கள், களத்தில் இறங்கி கலக்கிய அணி வீரர்கள் அதை சாதுர்யமாகப் பயன்படுத்தியது என, ஒட்டுமொத்த அணியின் திறமை சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு குடிமகனும், மூவர்ணக் கொடியேந்தி இந்த வெற்றியைக் கொண்டாட வைத்துள்ளது. விளையாட்டு துறையில் உலக அளவிலான பெருமையை தொடர்ந்து இந்திய அணி பெற்று வருகிறது.
முத்துறையிலும் முன்னணி
வளவன், நல்லாத்துப்பாளையம்: கபில்தேவ், தோனி ஆகியோருக்கு பின் உலககோப்பையை வெல்ல முடியாமல், கோப்பைக்கு அருகே சென்று வெல்லும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது. தற்போது, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி, அன்னிய மண்ணில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என, அனைத்திலும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியுள்ளது.
விமர்சனங்களுக்குப் பதிலடி
வினோத்குமார், ஜி.என்., கார்டன்: வீரர்கள் தேர்வில் பலரும் விமர்சனங்களை தெரிவித்து, கருத்துகளை பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் பலரும் இந்திய அணியை கிண்டலடித்து வந்தனர். ஆனால், இந்திய அணி தொடர்ச்சியான வெற்றியை பெற்று சாதித்துள்ளது. அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளது. கோலி, ரோகித், ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்துள்ளது கவலையை ஏற்படுத்தியது. அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட்டு, சரியான தருணத்தில் முடிவை அறிவித்துள்ளனர்.
இருக்கை நுனியில் அமர்ந்தோம்
மகேஸ்வரி, பெருமாநல்லுார்: நீண்ட காலத்துக்கு பின் இறுதிப்போட்டி படுசுவாரசியமாக இருந்தது. பதினாறாவது ஓவருக்கு பின் என்ன நடக்குமோ என்றபடபடப்பு அதிகரித்தது. பும்ராவின் துல்லிய பந்துவீச்சால் வெற்றி உறுதியானது. சூரியகுமார் மின்னல் வேக சமயோசித 'கேட்ச்' இருக்கை நுனிக்கு சென்று அமர வைத்தது.
'பினிசிங்'கில் என்றும் அற்புதம்
அசோக், குமார் நகர்: பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூன்றிலும் துல்லியமாக பணியாற்றிதே வெற்றிக்கு காரணம். போட்டி துவக்கத்தில் இந்திய வீரர்கள் அதிக ரன் எடுப்பர் என எதிர்பார்த்தோம். ஆனால், விக்கெட் விழுந்து தடுமாற்றம் ஏற்பட்டது.
அதே போல், பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்களிடம் ஏற்பட்ட தடுமாற்றம் தான் தென் ஆப்ரிக்கா பக்கம்வெற்றி செல்லுமோ என தோன்றியது. ஆனால், நம் அணி எப்போதுமே 'பினிசிங்' சரியாக செய்யும் என்பதைநிரூபித்துள்ளது.
தொற்றிக்கொண்ட பரபரப்பு
மோகன்ராஜ், ஊத்துக்குளி: சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இதயமே நின்று விடும் அளவுக்கு போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நம் பந்துவீச்சு எந்தப்போட்டியிலும் வெற்றியை தேடித்தரும் என்பதை காட்டியுள்ளனர். இறுதிப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, தன் திறமையை நிரூபித்துள்ளார்.
நினைவில் நீங்கா இடம்
வயமாரிமுத்து, திருப்பூர்: இறுதிப்போட்டியில் ஏராளமான உணர்வுபூர்வமான விஷயங்கள் நடந்தன. ஒவ்வொன்றையும் வரலாறு பேசும். என்றைக்கும், 140 கோடி மக்களின் நினைவில் நீங்கா இடமாக இப்போட்டி இருக்கும். ரோகித், கோலி, ஜடேஜா ஆகியோர் டி20ல் ஓய்வை அறிவித்தது வருத்தம் தந்தாலும், சரியான நேரத்தில் வருங்கால சந்ததியினருக்கு வழிவிட்டுள்ளனர். அவர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.