/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாலுகா அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதியில்லை
/
தாலுகா அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதியில்லை
ADDED : செப் 09, 2024 02:07 AM
உடுமலை:உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம், குடிமைப்பொருள் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம், நிலஅளவைப்பிரிவு, இ - சேவை மையம், ஆதார் மையம், கிளைச்சிறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தினமும் பல்வேறு பணிகளுக்காக, நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பெண்கள், முதியவர்கள் அதிகளவு வருகின்றனர். அதிலும், ஆதார் மற்றும் இ - சேவை மையங்களுக்கு, பெண்கள், குழந்தைகள் பெருமளவில் வருகின்றனர்.
இங்கு, குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, நீர் இல்லாமலும், பராமரிக்கப்படாமலும் வீணாக உள்ளது. அதே போல், நுாற்றுக்கணக்கான பெண்கள் வரும் நிலையில், கழிப்பறை வசதியில்லை.
மேலும், நிழல் மற்றும் இருக்கை வசதிகள் இல்லாமல், கடும் வெயில் மழையில் கால் கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது.
அதே போல், மக்கள் நடக்கும் பகுதிகளில், தாலுகா அலுவலகம் மட்டுமின்றி, கச்சேரி வீதியிலுள்ள அலுவலகங்களுக்கு வரும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், தாலுகா வளாகத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
வாகனம் நிறுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். எனவே, தாலுகா அலுவலக வளாகத்தில், உடனடியாக குடிநீர், இருக்கை, கழிப்பிட வசதிகளை செய்து தர வேண்டும்.