/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு தாய் - தந்தை போல உலகில் உறவில்லையே!
/
ஒரு தாய் - தந்தை போல உலகில் உறவில்லையே!
ADDED : செப் 16, 2024 12:10 AM

உழைக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நம்முடன் பகிர்ந்தவை:
பதின்பருவ வயதினர் வழி தவறிப்போதல், உயிரை மாய்ப்பது போன்ற பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
வேலைக்குச் சென்றாலும், பெற்றோர் கண்காணிப்பு - அரவணைப்பு குழந்தைகளுக்கு நிச்சயமாக வேண்டும்.
வீட்டில் அன்பு கிடைக்காதபோது, அதை யோசிக்கக் கூட தெரியாமல், பொய்யான நபர், போலி அன்பை நம்பி குழந்தைகள் ஏமாறுகின்றனர். அதே அன்பு வீட்டில் கிடைக்கும்போது, தவறான வழிக்குச் செல்லாது. குடும்பம் என்ற அடிப்படை அமைப்பு நன்றாக இருக்க வேண்டும்.
தனி மனித ஒழுக்கம் வேண்டும். குழந்தைகளைச் சரியாக வளர்க்க வேண்டும்; கண்காணிக்க வேண்டும்; அவர்கள் முன் பெற்றோர் முன்னுதாரணமாக நடக்க வேண்டும்.
குழந்தைகள் எது ஆசைப்பட்டாலும் வாங்கிக் கொடுத்து வளர்ப்பது, அதிகம் செல்லம் கொடுப்பது தவறு. குழந்தைகள் கஷ்டத்தை பார்க்காமல், சின்ன சின்ன தோல்வியைச் சந்திக்க விடாமல் பெற்றோர் பழக்கி விடுகின்றனர். இதை அவர்கள் திடீரென சந்திக்கும் போது, தோல்வியை தாங்க முடியாமல் தடுமாறுகின்றனர்.
நண்பனாக பழகுங்கள்
ஒரே நாளில் குழந்தைகளிடம் திடீரென எந்த மாற்றங்களையும் கொண்டு வர முடியாது. வளர்க்கும் போதே கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். பதின் பருவத்தில் நண்பனாக இருந்துதான் வளர்க்க வேண்டும். கல்லுாரி செல்லும் போது அறிவுரை கூறினால், அவர்கள் கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.
பள்ளியில் ஆசிரியர்கள் தவறான விஷயத்துக்கு கண்டித்தால், அதை நாம் ஆதரிக்க வேண்டும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு, பள்ளியில் ஆசிரியரிடம் கேட்கக்கூடாது. அப்படி நாம் கேட்டால், அந்த தவறை மீண்டும் செய்வார்கள்; யாருக்கும் பயப்படமாட்டார்கள்.
இருவரும் வேலைக்கு செல்பவர்கள், நிச்சயமாக நேரம் ஒதுக்க வேண்டும். அனைத்தையும் சொல்லி வழிகாட்ட வேண்டும். 'போக்சோ' வழக்குகளில், நன்றாக இருக்கும் குடும்பத்தில், குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை.
குடும்பத்தில் தந்தை, தாய் போன்றோர் சரியாக இல்லாத போது, குழந்தைகள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்கள் விருப்பு, வெறுப்புகளை காது கொடுத்து கேட்டறிய வேண்டும்.
நாள் முழுவதும் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்ச நேரமாக இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.