/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜில்'லுன்னு குடிக்கும் முன்பு யோசியுங்க!
/
'ஜில்'லுன்னு குடிக்கும் முன்பு யோசியுங்க!
ADDED : மார் 10, 2025 12:50 AM

திருப்பூர்; 'கோடையில் தாகம் தணிக்க, தரமான பழச்சாறுகள், குளிர்பானங்களை மட்டுமே வாங்கி அருந்த வேண்டும்' என, உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்துகிறது.
பகல் வேளையில் வெயில் கொளுத்த துவங்கியுள்ளதால், திருப்பூரின் பிரதான சாலைகளில், தற்காலிக குளிர்பான கடைகள் முளைத்துள்ளன. ரோட்டோரம் தள்ளுவண்டி கடைகள் அமைத்தும், பேக்கரி, குளிர்பான கடைகளிலும் சர்பத், லெமன் ஜூஸ், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
காலாவதி தேதிகட்டாயம் பாருங்கள்
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., (உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்) உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்ற கடைகளில் மட்டுமே பழச்சாறு மற்றும் உணவுப்பொருட்களை வாங்கவேண்டும். பாட்டில் குடிநீர், பாக்கெட் உணவுப்பொருட்களின் லேபிளில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரியை சரிபார்த்து வாங்கவேண்டும்.
பழங்கள் சிறப்புதோலில் கவனம்
பழங்கள், இயற்கையான பழச்சாறு, இளநீர், மோர், நுங்கு, நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி உட்கொள்ளவேண்டும். பழங்களின் தோலில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது; எனவே அவற்றை நன்றாக கழுவிய பின் பயன்படுத்த வேண்டும்.
வண்ணம் ஈர்க்கும்வயிற்றை கெடுக்கும்
சுகாதாரமற்ற கடைகளில், ஈ மொய்க்கும் பண்டங்கள், பழங்கள், பழச்சாறுகளை வாங்கக்கூடாது. ரசாயன நிறம், சுவையூட்டிகள் கலந்தபழச்சாறு, குளிர்பானங்களை தவிர்க்கவேண்டும்.
செயற்கையாக அதிக சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறமூட்டப்பட்ட பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் - 65 உள்ளிட்ட தின்பண்டங்களை உண்ணக்கூடாது. செயற்கையாக கல் வைத்து பழக்கவைக்கப்பட்ட பழங்களை வாங்கக்கூடாது. இதனால், உடல் உபாதைகள் ஏற்படும்.
விற்பனையாளருக்குவிழிப்புணர்வு
குளிர் பானங்கள் தயாரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான இடங்களில் வைத்து விற்பனை செய்யவேண்டும். காலாவதி குளிர்பானங்களை விற்பனைக்கு வைக்கக் கூடாது.
செயற்கையாக பழுக்கவைத்த பழங்கள் விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் மற்றும் குளிர்பான விற்பனையாளர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குளிர்பான விற்பனை கடைகளில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, தரமற்றவகையில் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை குறித்து தெரியவந்தால், 94440 42322 என்கிற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'94440 42322'
புகார் தரலாம்
குளிர்பான விற்பனை கடைகளில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, தரமற்றவகையில் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை தீவிரம் காட்டுகிறது. பொதுமக்கள், தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை குறித்து தெரியவந்தால், 94440 42322 என்கிற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
நிறைய தண்ணீர் குடியுங்கள்
''கோடை வெயில் வாட்டிவருவதால், வெளியே செல்லும்போது குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்தவேண்டும். மதியம், 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. காலை, மாலை வேளைகளில் ஏ.சி.,யை தவிர்த்து, ஜன்னல், கதவுகளை திறந்து, காற்ேறாட்டமாக வைத்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் (250 மி.லி) வீதம், நாளொன்றுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும்'' என்றார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை.