/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதனையை நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி
/
சாதனையை நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி
ADDED : பிப் 09, 2025 06:25 AM

திருப்பூர் : 'திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி, இந்த நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்; இது சாதனை அளவாக இருக்கும்' என்று ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர்.
திருப்பூர் பின்னலாடை தொழில் நகரம், கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு சோதனைகளைச் சந்தித்து, வெற்றி கண்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தை கூட எளிதாக கடந்த திருப்பூருக்கு, நுால் விலை ஏற்றமும், போர்ச்சூழலால் வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட பணவீக்கமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர் வரத்து தடைபட்டு, இயல்புநிலையை அடைய, 2022-23ல் கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. பசுமை சார் உற்பத்தி சாதனைகளை விளக்கியதன் வாயிலாக, மீண்டும் ஆர்டர் வரத்து அதிகரித்தது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், கடந்த, 2022 -23ம் ஆண்டில், 4.285 பில்லியன் டாலர் (35 ஆயிரம் கோடி ரூபாய்) அளவுக்கு, ஏற்றுமதி நடந்தது. பின், 2023 ஏப்., மாதம் துவங்கி, 2024 மார்ச் இறுதி வரையில், 3.707 பில்லியன் டாலர் (31, 250 கோடி ரூபாய்) அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்தது. நடப்பு நிதியாண்டு, திருப்பூருக்கு ஏற்றமும், நல்லதொரு மாற்றமும் கொடுக்கும் ஆண்டாக மாறியது.
கடந்த ஆண்டு பிப்., மாதம் துவங்கி, ஒவ்வொரு மாத ஏற்றுமதியும், முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகரித்தது. திருப்பூரில் இருந்து, ஆயத்த ஆடை நீங்கலாக, பின்னலாடை ஏற்றுமதி மட்டும், 23, 637 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. 2024 ஏப்., மாதம், 2,528 கோடி ரூபாய், மே - 3,095 கோடி, ஜூன் - 3,104 கோடி, ஜூலை - 3,185 கோடி, ஆக., - 3,190 கோடி, செப்- 2,810 கோடி, அக்., - 3,115 கோடி, நவ., - 2,610 கோடி என, நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், 23, 637 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
'பின்னலாடை மட்டுமல்லாது, ஆயத்த ஆடைகளையும் கணக்கிட்டு பார்த்தால், திருப்பூரின் இந்த நிதியாண்டு ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்று உறுதியாக நம்பலாம். இது சாதனை அளவாக இருக்கும்' என, ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.