ADDED : ஜூலை 01, 2024 01:55 AM

திருப்பூர் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை சரிந்தது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக, 12 டன் தக்காளி வரும். கடந்த, பத்து நாட்களாக வரத்து குறைந்து, ஆறு முதல், எட்டு டன் தான் வந்தது; நேற்று, 10.45 டன் வந்தது. வடக்கு உழவர் சந்தைக்கு, 2.50 டன் வழக்கமான வரத்தாக உள்ள நிலையில், ஒரு வாரமாக, 1.60 டன் தக்காளி மட்டும் வந்தது. நேற்று, 2.30 டன் தக்காளி வந்தது.
குறைந்திருந்த தக்காளி வரத்து மெல்ல அதிகரித்து இயல்பு திரும்ப துவங்கியுள்ளதால், சந்தையில் கிலோ, 60 முதல், 70 ஆக இருந்த ஒரு கிலோ தக்காளி விலை, நேற்று, கிலோ 45 முதல், 50 ரூபாய் ஆக குறைந்தது.
இரண்டு தினங்களாக கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில தக்காளி வரத்து அதிகமாகி, வெளிமார்க்கெட்டில் விலை குறைந்தது. இதனை அறிந்து, லாபத்தை எதிர்பார்த்து நேற்று பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை சந்தைக்கு கொண்டு வந்தனர். ஒரே நேரத்தில் வரத்து ஒரு டன் வரை உயர்ந்து விட்டதால், விலை திடீரென குறைந்து விட்டது.