/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் வேகத்தை அதிகரிக்க தண்டவாளம் சீரமைப்பு பணி
/
ரயில் வேகத்தை அதிகரிக்க தண்டவாளம் சீரமைப்பு பணி
ADDED : ஜூலை 25, 2024 12:09 AM

திருப்பூர்,  : அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க, ரயில் தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணி ரயில்வே மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஜோலார்பேட்டை, சேலம், கோவை வழித்தடத்தில் இப்பணி சுறுசுறுப்பாக நடந்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு வழித்தடத்தில் தண்டவாளங்களை மாற்றும் பணிகளும் துவங்கியுள்ளது.
கோவை - திருப்பூர், ஈரோடு, வழித்தடத்தில், 17 இடங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டிய இடங்களாக கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் தண்டவாளத்தை மாற்றியமைக்கும் பணி துவங்கியுள்ளது. வஞ்சிபாளையம் - திருப்பூர் இடையே, 50 மீ., துாரத்துக்கு தண்டவாளங்களை மாற்றியமைக்கும் பணி, 30க்கும் மேற்பட்ட பணியாளர் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
ரயில்வே பொறியியல் குழுவினர் கூறியதாவது:
ரயில்களின் வேகம் அதிகரிக்கும் போது, அதற்கேற்ப தண்டவாளங்களை மாற்றியமைக்க வேண்டும். தற்போது இருக்கும் தண்டவாளம் மீட்டருக்கு, 52 கிலோ எடை கொண்டவையாகவும், சிலாப் கற்களுக்கான இடைவெளி, 64 மி.மீ., ஆகவும் உள்ளது. இவற்றை மாற்றி, மீட்டருக்கு, 60 கிலோ எடை கொண்ட தண்டவாளம் எடை கூட்டப்பட்டு, சிலாப் கற்களுக்கான இடைவெளி, 60 மி.மீ., ஆகவும் குறைக்கப்படுகிறது.
இதனால், ரயில்கள், 130 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். நடப்பாண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிவடையும். இதன் மூலம், இயங்கும் ரயில்களில் வேகம் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

