/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றணும்: வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
/
மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றணும்: வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றணும்: வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றணும்: வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஏப் 30, 2024 11:24 PM
உடுமலை:உடுமலை நகரின் மத்தியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால், கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி, 11வது வார்டு, பசுபதி வீதியில், நகர கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் பிரதான போக்குவரத்து ரோடான, தளி ரோட்டை இணைக்கும் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை ( எண் 2004) அமைந்துள்ளது.
இதனால், இந்த வழித்தடத்தை பெண்கள், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மது ஆசாமிகள் தொல்லை அதிகரித்துள்ளதோடு, போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்கள், வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள், பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதே போல், பஸ் ஸ்டாண்ட், வணிக நிறுவனங்கள், கோவில், பள்ளிகள் என மக்கள் நெரிசல் மிகுந்த, பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை (எண் 2009) அகற்ற வேண்டும், எனவும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
நகருக்கு மத்தியில், மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை மாற்ற வேண்டும், என பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உடுமலை வியாபாரிகள் சங்கம் சார்பில், கடந்தாண்டு மனு அளிக்கப்பட்டதோடு, போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், நகராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, விரைவில் இரு கடைகளும் மாற்றப்படும் என உறுதியளித்திருந்தனர். ஆனால், ஒரு ஆண்டாகியும் மாற்றப்படவில்லை.
இந்நிலையில், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என, வியாபாரிகள் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வரும், 5ம் தேதிக்குள் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளையும் மாற்றாவிட்டால், வரும், 18ம் தேதி, வியாபார நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில், கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும், அன்று ஒருநாள் நகர பகுதியிலுள்ள கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.