/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலம் அபகரிக்க பட்டா மாறுதல் முறைகேடு?
/
நிலம் அபகரிக்க பட்டா மாறுதல் முறைகேடு?
ADDED : மே 31, 2024 01:37 AM

பல்லடம்;நிலம் அபகரிக்க பட்டா மாறுதல் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள், பல்லடம் தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.
திருப்பூர், வீரபாண்டி, சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 70. பல்லடம் அடுத்த கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள, தனக்கு சொந்தமான, 7.17 ஏக்கர் நிலம், வேறொரு நபருக்கு, தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது என, தெய்வசிகாமணி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தெய்வசிகாமணியுடன் வந்த கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தனது 7.17 ஏக்கர் நிலத்தில் கட்டடம் கட்டி தெய்வசிகாமணி பள்ளி நடத்தி வருகிறார். எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல், விசாரணையும் மேற்கொள்ளாமல், தெய்வசிகாமணியின் பெயர் நீக்கப்பட்டு, பட்டா மாற்றப்பட்டு வேறொருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
பட்டா மாறுதலை பின்பற்றி, அந்த நபர் மோசடியாக செட்டில்மென்ட் பத்திரம் கிரயம் செய்துள்ளார்.
மோசடிக்கு வருவாய் துறை அதிகாரிகள் சிலரும் துணைபோயிருப்பதாக சந்தேகம் உள்ளது. பட்டா மாறுதலை ரத்து செய்து, தெய்வசிகாமணிக்கு சொந்தமான நிலம் அவருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
முன்னதாக, நாரணாபுரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ''பட்டா மாறுதலில் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளது. ஜூன் 6ம் தேதிக்குப்பின் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்'' என, தாசில்தார் ஜீவா கூறியதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.