/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ரூ.99.20 லட்சத்திற்கு குட்டை திடல் ஏலம்
/
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ரூ.99.20 லட்சத்திற்கு குட்டை திடல் ஏலம்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ரூ.99.20 லட்சத்திற்கு குட்டை திடல் ஏலம்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ரூ.99.20 லட்சத்திற்கு குட்டை திடல் ஏலம்
ADDED : ஏப் 15, 2024 09:05 PM
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க குட்டைத்திடல், ரூ.99.20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கி நடந்து வருகிறது. வரும், 25ம் தேதி, திருத்தேரோட்டம் நடக்கிறது.
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, உடுமலை குட்டைத்திடலில், ராட்டிணம், சிறுவர் விளையாட்டுக்கள் என, ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் திருவிழா கடைகள் அமைக்கப்படுகிறது.
இதற்காக, வருவாய்த்துறைக்கு சொந்தமான, 0.91 ஏக்கர் பரப்பளவுள்ள குட்டைத்திடலில், தனியார் பொருட்கள் காட்சி நடத்திக்கொள்ள அனுமதியளிக்கும் வகையில், தாலுகா அலுவலகத்தில் நேற்று பொது ஏலம் நடந்தது.
இதில், 8 பேர் கலந்து கொண்டனர். அரசு நிர்ணயித்த, 71 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாயிலிருந்து ஏலம் துவங்கியது. இறுதியாக, 99 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் இறுதி செய்யப்பட்டது.
வரும், 20ம் தேதி முதல், மே 11ம் தேதி வரை, குட்டைத்திடலில், பொருட்காட்சி அமைக்க அனுமதியளிக்கப்படுகிறது. ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கும் போது, உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அமைக்க வேண்டும்.
ஏற்கனவே, ஏலதாரர்கள் அலட்சியம் காரணமாக, விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு பொழுது போக்கு அம்சங்கள் அமைப்பதில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்யவும், தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.
மேலும், திருவிழா காலங்களில் அமைக்கப்படும், பொழுது போக்கு அம்சங்களுக்கு, அரசு அதிகாரிகள் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச தொகையே வசூலிக்க வேண்டும்.
இரவு, 10:00 மணிக்கு மேல் இயக்கக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விதிமுறைகள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஏலம் எடுப்பவர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும், அபரிமிதமாக கட்டணமும் வசூலிக்கின்றனர்.
எனவே, பொருட்காட்சி உபகரணங்கள் அமைப்பதற்கு முன், கட்டுப்பாடுகள் குறித்தும், கட்டண நிர்ணயம் குறித்தும், பொது அறிவிப்பு பலகை வைக்கவும், அரசுத்துறை அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும், என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாகும்.

