/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை உறுதி திட்டத்தில் பொதுப்பணிகளுக்கு முக்கியத்துவம் ஒன்றிய அலுவலர்கள் அறிவுறுத்தல்
/
வேலை உறுதி திட்டத்தில் பொதுப்பணிகளுக்கு முக்கியத்துவம் ஒன்றிய அலுவலர்கள் அறிவுறுத்தல்
வேலை உறுதி திட்டத்தில் பொதுப்பணிகளுக்கு முக்கியத்துவம் ஒன்றிய அலுவலர்கள் அறிவுறுத்தல்
வேலை உறுதி திட்டத்தில் பொதுப்பணிகளுக்கு முக்கியத்துவம் ஒன்றிய அலுவலர்கள் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 29, 2024 08:48 PM
உடுமலை;தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், சிறப்பு பணிகள் குறைக்கப்பட்டு பொதுப்பணிகள் வழங்கப்படுகின்றன.
கிராமங்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான திட்டமாக, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 80 சதவீத பணிகள் பெண்களுக்கு வழங்கப்பட்டு, சுழற்சி முறையில், நுாறு நாட்களுக்கு பணிகள் வழங்கப்படுகின்றன.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளிலும் இத்திட்டத்தின் கீழ் துாய்மைப்பணிகள், அரசு கட்டமைப்பு அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் வழங்கப்படுகின்றன. தனிநபர்களுக்கான சிறப்புப்பணிகள் மற்றும் பொதுப்பணிகளாக இரண்டு பிரிவுகளில் பணியாளர்கள் நிர்ணயிக்கப்படுகின்றனர்.
கிராமங்களில் ரோடு பராமரிப்பு, குளம், குட்டை கரை கட்டுதல், அரசு கட்டடங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பொதுவாகவும், வேளாண் விளைநிலங்களில் வரப்பு, வட்டபாத்தி அமைக்கும் பணிகள் தனிநபர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
வழக்கமாக ஒவ்வொரு நிதியாண்டிலும், ஏப்., மாதத்தில் வேலை உறுதி திட்டத்தில் புதிய பணிகள் வழங்கப்படுகிறது. அரசின் சார்பில், அந்த நிதியாண்டுக்கு வழங்கப்பட வேண்டிய பணிகளின் பட்டியலும் அறிவிக்கப்படும்.
நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் காரணத்தால் புதிய நிதியாண்டு துவங்கியும், புதிய பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. இதனால் கடந்தாண்டின் பணிகளை தொடர்வதும், அதற்கான மானியத்தொகையை மட்டுமே பயன்படுத்தும் நிலையிலும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளது.
பணிகள் குறைவாக இருக்கும் பட்சத்தில், பணியாளர்களையும் அதற்கேற்ப நிர்ணயித்துக்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், வேலை உறுதித்திட்டத்தின் கீழ், பொதுப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்கு, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது பலருக்கும் நுாறு நாள் பணிக்காலம் நிறைவடைந்து விட்டதால், எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த நிதியாண்டுக்கான நிலுவை பணிகள் அதிகம் இருப்பதால், அவற்றை மே மாதத்திற்குள் முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பொதுப்பணிகளுக்கு அதிகமான ஆட்களை நியமிப்பதற்கு ஊராட்சிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,'' என்றனர்.

