ADDED : மே 24, 2024 12:00 AM

திருப்பூர்:குடிநீர் குழாய் சீரமைப்பு பணி காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு பலகை அகற்றப்படாததால், தாராபுரம் ரோடு வழியாக, நகருக்குள் வரும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே துவங்கி, தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் வரை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்காக காங்கயம் ரோட்டில் வரும் வாகனங்கள், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
மே, 11 முதல், 14 வரை நான்கு நாட்களுக்கு பணி நடந்த இடத்தில் போக்கு வரத்து தடைவிதிக்கப்பட்ட நிலையில், பணி முழுமையாக முடிந்து, 16ம் தேதி போக்குவரத்துக்காக சாலை திறக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் உஷா தியேட்டர் ஸ்டாப்பில் இருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் நோக்கி பயணித்து வருகிறது.
ஆனால், போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போலீசார் சார்பில், ஆங்காங்கே வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றப்படவில்லை. குறிப்பாக, தாராபுரம் ரோடு, வெள்ளியங்காடு, 60 அடி ரோடு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு அகற்றப்படாததால், புதிதாக நகருக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே, அறிவிப்பு பலகையை உடனே அகற்ற வேண்டும்.