/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றிக்கனி பறிப்பது யார்? ஜூன் 4 வரை திக்... திக்... திக்! கணிக்க முடியாத நிலவரம்
/
வெற்றிக்கனி பறிப்பது யார்? ஜூன் 4 வரை திக்... திக்... திக்! கணிக்க முடியாத நிலவரம்
வெற்றிக்கனி பறிப்பது யார்? ஜூன் 4 வரை திக்... திக்... திக்! கணிக்க முடியாத நிலவரம்
வெற்றிக்கனி பறிப்பது யார்? ஜூன் 4 வரை திக்... திக்... திக்! கணிக்க முடியாத நிலவரம்
ADDED : ஏப் 21, 2024 12:26 AM

திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதியில் ஒவ்வொரு கட்சியினரும், தங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாக உழைத்திருக்கின்றனர்; அதே நேரம், கட்சிக்குள் அதிருப்தி அலைக்கும் பஞ்சமில்லை.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகின; காரணம், தேர்தலுக்கு மிகக்குறுகிய காலமே இருந்தது. பதினாறு லட்சம் வாக்காளர்கள் உள்ள திருப்பூர் லோக்சபா தொகுதியில் யார் வேட்பாளர் என்பதில், கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
வியூகம் வகுத்த பா.ஜ.,
பா.ஜ., சார்பில் களமிறக்கப்பட்ட அக்கட்சியின் மாநில பொது செயலர் முருகானந்தம், 'தொகுதிக்கு புதியவர்' என்ற போதிலும், அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி தொகுதிகளில், தங்கள் கட்சிக்கு இருந்த வரவேற்பை தனக்கு சாதகமாக்கி, அந்த தொகுதிகளில் ஓட்டு அறுவடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
விவசாயிகள் மற்றும் மக்களோடு, மக்களாக கலந்து விவசாயிகளை நேரில் சந்தித்து டிராக்டர் ஓட்டியும், களையெடுத்தும், அவர்களின் ஓட்டுகளை கவர வியூகம் வகுத்தார். நகரில் உள்ள இரு தொகுதிகளை விட, அங்கு தான் அவர் அதிக நாட்கள் பிரசாரம் செய்தார்.
பா.ஜ., அரசு மீது தாக்குதல்
தி.மு.க., கூட்டணியில், எதிர்பார்க்கப்பட்டது போல், இந்திய கம்யூ., வுக்கு தொகுதி ஒதுக்கப்பட, அக்கட்சியினரின் கடும் அதிருப்தியையும் தாண்டி, 'சிட்டிங்' எம்.பி., சுப்பராயனுக்கே 'சீட்' வழங்கப்பட்டது. தேசிய அரசியல், பா.ஜ., மற்றும் மோடியை விமர்சிப்பதை, சுப்பராயன் தனது தேர்தல் வியூகமாக வகுத்திருந்தார்.
திருப்பூரில் தொழில் வீழ்ச்சிக்கு காரணம் பா.ஜ., அரசு தான் என, ஒவ்வொரு பிரசார கூட்டங்களிலும் கூறினார். கட்சியினர் பலரும் வீடு, வீடாக ஓட்டு சேகரித்திருக்கின்றனர். சுப்பராயனுக்கு ஆதரவாக, அக்கட்சியின் மாநில, தேசிய தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்ய வராதது, பேசு பொருளாக மாறியிருக்கிறது.
தி.மு.க., அரசு மீது விளாசல்
அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அருணாச்சலம், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமியின் உறவினர் என்பதும், அவர் பெருந்துறை பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருப்பதையும் பிரதான வியூகமாக மாற்றி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
'திருப்பூர் மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு தி.மு.க., எதுவும் புதிதாக செய்யவில்லை; அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட பணிகளுக்கு தான் 'ஸ்டிக்கர்' ஒட்டி மக்களை திசை திருப்பி வருகிறது' என்பதையே பிரசார வியூகமாக கொண்டிருந்தனர்.
ஏற்கனவே, தங்கள் கட்சிக்கு ஓட்டு வங்கி அதிகமுள்ள கோபி, பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளில், ஓட்டு அறுவடையில் கூடுதல் கவனம் செலுத்தினர்.
களத்தில் முந்திய'நாம் தமிழர்'
இதில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, வேட்பாளரை அறிவித்தது, நாம் தமிழர் கட்சி தான். அக்கட்சி வேட்பாளரும், கட்சியினரும் தொகுதி முழுக்க சுற்றி, தங்களின் 'நிதி நிலை'க்கு ஏற்ப, ஓட்டு சேகரித்தனர். தொழில் வளர்ச்சி, விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்குவதே எங்களின் நோக்கம் என, மாவட்டத்தின் பிரதான பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்தனர். குறிப்பாக, கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கினர்.
வெற்றி பெறுவது யார்?
பா.ஜ., - அ.தி.மு.க., - இந்திய கம்யூ., வேட்பாளர்கள் தாங்கள் தான் வெற்றிபெறுவோம் என்று மார்தட்டினாலும், களத்தின் நிலை அவ்வாறு இல்லை; கடும் போட்டி நிலவியதாகவே அரசியல் ஆர்வலர்கள் கூறினர். ஜூன் 4 வரை திக்... திக்... நிலையுடன் கட்சியினரும், வேட்பாளர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. வாக்காளர்களும், தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
(வேட்பாளர்கள் பேட்டி - உள்ளே)

