திருப்பூர்:சாலை புதுப்பிக்கும் போது, பழைய சாலையை சுரண்டி எடுக்காமல் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று உத்தரவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை. கருவம்பாளையம் ஆரம்பப்பள்ளி வீதியில், சாலையில் இருந்து தாழ்வாக பள்ளி, வீடுகள் உள்ள நிலையில், பழைய சாலை மீதே புதிய சாலையை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
''நெடுஞ்சாலைத்துறை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது, ஏற்கனவே உள்ள சாலை மட்டத்தை உயர்த்துவதால், சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகள் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் அடர் தார்தளம் போடப்பட்டு இருக்கும். அதனால், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகளில் மேலும் ஓர் அடுக்கு அடர் தார்தளம் போட்டு சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியது இல்லை.
சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும். மேற்பரப்பைச் சுரண்டிவிட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கும். எந்தச் சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது'' என்று தலைமைச்செயலாளராக இறையன்பு இருந்தபோது உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.
இதைத் துவக்கத்தில் கடைபிடித்துவந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள், தற்போது இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் போது மேற்தளக் கட்டுமானத்தைச் சுரண்டாமலே, சாலை அமைக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இதோ ஒரு உதாரணம்
திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையம் ஆரம்பப்பள்ளி வீதியில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; கடந்த, 1975, 1976ல் உருவான 'சைட்'களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியும் செயல்படுகிறது. இங்கு சாலை புதுப்பிக்கப்பட உள்ளது. ஆனால், தாரை சுரண்டாமலே, சாலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுவதால் குடியிருப்புவாசிகள் எதிர்க்கின்றனர்.
குடியிருப்புவாசிகள் கூறியதாவது:எங்கள் பகுதி வீடுகள், சாலையில் இருந்து தாழ்வாக உள்ளன. மழையின் போது, சாக்கடை நீருடன் மழைநீர், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தற்போது இங்குள்ள தார் சாலை புதுப்பிக்கப்பட உள்ளது; சாலையின் மீதே, புதிதாக தார் சாலை அமைத்தால், சாலையின் உயரம் மேலும் அதிகரிக்கும்; இதனால் மழையின் போது, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.
இத்தகைய பணி மேற்கொள்ளும் போது, பழைய சாலையில் போடப்பட்டுள்ள தாரை சுரண்டி எடுத்து, அதன் உயரத்தை குறைத்து, அதன்பிறகு புதிய சாலை அமைக்க வேண்டும் என, அரசின் வழிகாட்டுதலும் உள்ளது. அதுபோல், சாலைப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கவுன்சிலர் சாந்தாமணி கூறியதாவது:
ஆரம்பப்பள்ளி வீதியில் பழைய ரோட்டை சுரண்டி, அதன் உயரத்தை குறைத்து, அதன் மீது தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு இல்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே உள்ள ரோட்டின் மீது தான் தார் போட உள்ளதாகவும் கூறுகின்றனர்; இதனால், ஒரு 'இன்ச்' அளவுக்கு தான் உயரம் ஏற்படும்; பெரிய பாதிப்பு ஏற்படாது.
இந்த வாய்ப்பை தவறவிட்டால், அந்த நிதி வேறு பணிக்கு சென்றுவிடும். வாய்ப்பை பயன்படுத்தி, ரோடு அமைக்க அனுமதிக்குமாறு மக்களிடம் கேட்டுள்ளேன். பழைய ரோட்டை சுரண்டி, புதிய ரோடு அமைக்கும் வாய்ப்பு வரும் போது, பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளேன். வீடுகளின் இடையே கழிவுநீர் கால்வாய் கட்டுமானப்பணி தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் வழங்கியுள்ளேன்; நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாக கூறியுள்ளனர்.