/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆன்லைனில் வரிசெலுத்த விபரங்களை புதுப்பிக்கணும்
/
ஆன்லைனில் வரிசெலுத்த விபரங்களை புதுப்பிக்கணும்
ADDED : மே 12, 2024 10:49 PM
உடுமலை;ஊராட்சிகளில் ஆன்லைனில் வரி செலுத்துவதற்கான விபரங்களை, புதுப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் அமைந்துள்ளன. வீட்டுவரி, குடிநீர் வரி போன்றவை முக்கிய வருவாயாக உள்ளன. இதன் வாயிலாக, ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது தமிழக அரசால், ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கான வீட்டுவரி, குடிநீர் வரிகளை ஆன்லைன் வாயிலாக, செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வரிசெலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், கடந்தாண்டு அக்., முதல் ஆன்லைனில் வரி செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டடங்களுக்கான அனுமதி பெறுவதும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பான்மையான கிராமங்களில், ஆன்லைனில் வரிசெலுத்துவதற்கு பொதுமக்கள் முறையான பதிவுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது.
வரிசெலுத்துவதற்கான பதிவுகளை புதுப்பிக்கவும், சரிபார்த்துக்கொள்வதற்கும் ஊராட்சிகளில் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் விரைவில் பதிவுகளை மேற்கொள்ளவும், ஊராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
போடிபட்டி ஊராட்சியில் 'வாட்ஸ் ஆப்' குழுவின் வாயிலாகவும், கிராமங்களில் அறிவிப்பாகவும் வரிசெலுத்துவதற்கான பதிவுகளை மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், வரிசெலுத்துவதற்கான இணையதளத்தில் உள்ள பொதுமக்களின் விபரங்கள், சரியானதாக இருப்பதாக அவர்கள் நேரடியாக வந்து உறுதிபடுத்திக்கொண்டு, மாற்றம் இருக்கும் பட்சத்தில் புதுப்பித்துக்கொள்வதற்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விபரங்களை சரிபார்க்கவும், புதுப்பிக்கவும், பதிவேற்றம் செய்யவும், பட்டா, பத்திரம், ஆதார் எண், வில்லங்கச்சான்று, மொபைல் எண், வீட்டுவரி ரசீது, குடிநீர் கட்டண ரசீது, குடிநீர் வைப்புத்தொகை ரசீது, இ-மெயில் முகவரி உள்ளிட்டவற்றை சரியாக ஊராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.