/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாசு ஏற்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
மாசு ஏற்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாசு ஏற்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாசு ஏற்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : மே 10, 2024 11:05 PM
உடுமலை:பொதுமக்களை பாதிக்கும் வகையில் செயல்படும், உடுமலை நகராட்சி மற்றும் பெரியகோட்டை ஊராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
உடுமலை தாராபுரம் ரோட்டில், நகருக்கு மத்தியில், சிவசக்தி காலனி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான, 4 ஏக்கர் பரப்பளவில் பழைய குப்பைக்கிடங்கு உள்ளது. 30 ஆண்டுக்கும் மேலாக குப்பை, கழிவுகள் மலைபோல் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.
சுற்றிலும், சிவசக்தி காலனி, காந்திநகர், புஷ்பகிரி வேலன் நகர், காமராஜ் நகர், செல்லம் நகர், சங்கர் நகர் என ஏராளமான குடியிருப்புகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி மக்களின் போராட்டம் காரணமாக, கணபதிபாளையத்திற்கு குப்பைக்கிடங்கு மாற்றப்பட்டு, அங்கிருந்த குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு, அதுவும் மூடப்பட்டது.
தற்போது நுண் உரக்குடில்கள் அமைத்து, குப்பை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், பழைய குப்பைக்கிடங்கில் கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.
மேலும், பெரியகோட்டை ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, நகராட்சி பழைய குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு, தினமும் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல், குப்பை, கழிவுகள் கொட்டி தீ வைக்கப்படுவதால், காற்று மாசு ஏற்படுவதோடு, 2 கி.மீ., துாரத்திற்கு புகை மண்டலமாக மாற்றப்படுகிறது.
இதனால், குழந்தைகள், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு, சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும், இறைச்சி, மீன் கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை உணவாக கொள்ள, நுாற்றுக்கணக்கான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.
குழந்தைகள், பெரியவர்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன. குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் பல கி.மீ., துாரம் காற்றில் பறந்து வீடுகள், தெரு மற்றும் ரோடுகளில் குவிந்து வருகின்றன.
தெருவில் ஈக்கள், பாம்பு என விஷ ஜந்துக்கள் பரவி வருகின்றன. இது குறித்து பல முறை, நகராட்சி மற்றும் பெரிய கோட்டை ஊராட்சிக்கு மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை.
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பறக்கும் படை வாயிலாக, திடீர் ஆய்வு செய்து, சுகாதார கேடு மற்றும் காற்று மாசு ஏற்படுத்தி வரும், உடுமலை நகராட்சி மற்றும் பெரிய கோட்டை ஊராட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, குப்பை கிடங்கை சுற்றிலும் உள்ள குடியிருப்போர் நல சங்கங்கள் வாயிலாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.