/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உணவுப்பொருளை அன்றன்றே பயன்படுத்துங்கள்'
/
'உணவுப்பொருளை அன்றன்றே பயன்படுத்துங்கள்'
ADDED : ஜூலை 01, 2024 11:51 PM
பல்லடம்:பல்லடத்தில், சில்லறை விற்பனையாளர்களுக்கான உணவுப்பொருள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வணிகர் சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வரவேற்றார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
பயிற்சியாளர் அருண் பேசியதாவது:
உணவு பாதுகாப்பை பொறுத்தவரை எத்தனையோ அபாயங்கள் உள்ளன. உணவுப் பொருள் உள்ள இடங்களில் ரசாயனங்களை ஒருபோதும் வைக்கக்கூடாது. அன்றன்று தயாரித்த உணவுப் பொருட்களை அன்றே பயன்படுத்தி விட்டால் நல்லது. தேக்கி வைத்து பயன்படுத்துவதால்தான் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன.
உணவு பொருட்களில் நடக்கும் ரசாயன மாற்றங்களுக்கு பாக்டீரியாக்களே காரணம். பொதுவாக பாக்டீரியாக்கள் இருந்தால் மட்டுமே உணவு பொருட்கள் கெட்டுப் போவதில்லை. பாக்டீரியாக்கள் பெருகும்போதுதான் அந்த மாற்றம் நடக்கும். இந்த மாற்றத்துக்கு தட்பவெப்பநிலையே முக்கிய காரணமாக உள்ளன.
இனிப்பு பண்டங்களில் மட்டுமே நிறமியை சேர்க்க வேண்டும். ஆனால், இன்று தவறாக பெரும்பாலான உணவுப் பொருட்களில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. தெரிந்தே யாரும் தவறு செய்வதில்லை. ஆனால், தெரியாமல் நடக்கும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.